ஆடுதுறையில் பேரூராட்சித் தலைவராக உள்ள பாமக நிர்வாகி மீது மர்ம கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறை பேரூராட்சித் தலைவராக உள்ள பாமக நிர்வாகி ம.க.ஸ்டாலின் என்பவர் இன்று வழக்கம்போல அலுவலகத்திற்கு வந்து பணியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது பத்திற்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் திடீரென அலுவலகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர்கள் குண்டுகளை வீசியுள்ளனர்.
ம.க.ஸ்டாலின் அங்கிருந்து தப்பி ஓடியதால் நூலிழையில் உயிர்த்தப்பியுள்ளார். மேலும் உள்ளே இருந்த மற்றவர்களை அரிவாளால் அந்த கும்பல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் எதிர்ப்பை தெரிவிக்கும் நிலையில் நடுசாலையில் வாகனங்களின் டயர்களை போட்டு தீவைத்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.
வெடிகுண்டு வீச முயன்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''ஆடுதுறை பேரூராட்சியில் பேரூராட்சித் தலைவர் மீது வெடிகுண்டு போடுகிறார்கள். இன்றைக்கு வந்த செய்தி. ஆடுதுறை பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் மீது சில பேர் சென்று வெடிகுண்டு போடுகிறார்கள். அவர் அருகில் இருந்த இரண்டு பேர் படுகாயமடைந்து மயிரிழையில் உயிர்தப்பி இருக்கிறார். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதற்கு இதுவே சாட்சி. சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை, முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒட்டுமொத்த மக்களுக்கே பாதுகாப்பு தராத அரசாங்கம் திமுக அரசாங்கம்'' என்றார்.