தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மாவட்டத்தில் இன்று (11.09.2025) பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் அவர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார்.
அப்போது அங்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரை காண்பதற்காக அங்கு வந்திருந்தனர். அச்சமயத்தில் மடத்துக்குளம் கள்ளுக்கடை பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்ற பெண்மணி கூட்ட நெரிசலில் நீண்ட நேரம் நின்றிருந்தார். இதன் காரணமாக அவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் இருந்த அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது பெண் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் பொறித்த பெரிய அளவிலான கட்அவுட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் மீதும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஏறி நின்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.