“இந்த அரசு 3 கொலைகளை கண்டும் காணாமல் இருக்கிறது” - ஆர்ப்பாட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி

eduppad

Edappadi palaniswami

சிவகங்கை நாட்டாகுடியில் நடந்த 3 கொலைகளை கண்டும் காணாமலும் இருந்து வருவதோடு, மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாத்து, கிராமத்தை விட்டு வெளியேறியுள்ள மக்களை மீண்டும் குடியமர்த்தி, தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரமான விவசாயம், கால்நடை வளர்ப்பு முதலானவற்றை தொடர்ந்து மேற்கொண்டிடவும், இங்குள்ள தொடக்கப் பள்ளியை திறந்திடவும் வலியுறுத்தியும், கிராம மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக ஆட்சிக் காலங்களில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லாமல், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த 51 மாதகால திமுக ஆட்சியில், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறியதன் காரணமாக, மக்கள் சொல்லொண்ணா வேதனையோடும், அச்சத்தோடும் வாழ்ந்து வருகின்றனர். இதற்கெல்லாம் விடிவு காலம் வெகு விரையில் வர உள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒன்றியம், மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்த நிலையில், இக்கிராமத்தில் தொடர்ந்து மூன்று கொலைகள் கொடூரமான முறையில் நடைபெற்ற காரணத்தால் அச்சமடைந்துள்ள மக்கள் அனைவரும் தங்களது வீடுகள், கால்நடைகள், விவசாயம் உள்ளிட்டவற்றை அப்படியே விட்டுவிட்டு இங்கிருந்து வெளியேறிவிட்டனர். இதுகுறித்து திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத இந்த அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒன்றியம், மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் தொடர்ந்து மூன்று கொலைகள் கொடூரமான முறையில் நடைபெற்றுள்ளதை கண்டும் காணாமலும் இருந்து வருவதோடு, மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறிய திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாத்து, கிராமத்தை விட்டு வெளியேறியுள்ள மக்களை மீண்டும் குடியமர்த்தி, தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரமான விவசாயம், கால்நடை வளர்ப்பு முதலானவற்றை தொடர்ந்து மேற்கொண்டிடவும், இங்குள்ள தொடக்கப் பள்ளியை திறந்திடவும் வலியுறுத்தியும் அதிமுக சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் வரும் 13ஆம் தேதி  காலை 10 மணியளவில், சிவகங்கையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

admk demonstration edappadi palanisami sivagangai
இதையும் படியுங்கள்
Subscribe