Edappadi Palaniswami and Piyush Goyal meeting Consultations for assembly election
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று (23-12-25) சென்னைக்கு வருகை தந்தார். சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரைம் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து தனியார் ஹோட்டலில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடன், பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் அதிமுக மூத்த தலைவர்கள், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க தேர்தல் இணை பொறுப்பாளர் அர்ஜுன்ராம் மேக்வா ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆலோசனையில் கூட்டணி விவகாரங்கள் குறித்தும், தொகுதி விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, அதிமுகவிடம் 30 முதல் 40 தொகுதிகளை கேட்டு பெற பா.ஜ.க திட்டமிட்டிருப்பதாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.கவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட நிலையில், கூட்டணித் தலைவரான எடப்பாடி பழனிசாமியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us