நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தொடங்கியது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தார். அவருக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது.

Advertisment

அப்போது பேரவையில் முதலில் தேசிய கீதம் தான் பாட வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது சபாநாயகர் அப்பாவு பேரவையின் மரபை எடுத்து கூறிய போது அதனை ஏற்க மறுத்த ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறினார். இதற்குகடும் கண்டனம் தெரிவித்த  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்ற விதியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஆளுநர் வாசிக்கவிருந்த தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை அவருக்கு பதிலாக  சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

Advertisment

அப்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் குற்றச்சாட்டி முன்வைத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது இன்று பேரவையில் ஆளுநர் உரை மட்டுமே இருக்கும், மற்ற விஷயங்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர்.

அதனை தொடர்ந்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாட்களே இல்லை. அன்றாட செய்தி இந்த செய்தி தான் வெளியாகிறது. அந்த அளவுக்கு மோசமான சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாடு போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக உருவாகிவிட்டது. போதைப் பொருளை தடுக்க வேண்டும் என்று பலமுறை இந்த அரசை வலியுறுத்தியும் இந்த அரசு செவி சாய்க்காமல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி கடும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மோசமான ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்” என்று கூறினார்.

Advertisment

இதையடுத்து ஆளுநர் உரையுடன் தொடங்குகின்ற விதியை மாற்றுவதற்கான நடவடிக்கை திமுக மேற்கொள்ளும் என்று முதல்வர் கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அவரே அப்படி கற்பனை செய்து கொள்கிறார். இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் என்று சொல்லிட்டு இருக்கிறார். ஆளுநர் வெளியேறிய பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை எல்லாம் உண்மை தானே. அமைச்சரவை தயாரிக்கப்பட்ட உரையில் என்னென்ன தவறுகள் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும் தானே. ஆளுநர் தவறான செய்தியை வாசிக்க மாட்டேன் என்று சொல்கிறார். அவருடைய நியாயம் அது தான். தமிழகத்தில் நிலவுகின்ற நிலைமையில் உண்மை இருந்தால் தான் அதை பற்றி அவர் பேச முடியும். அதில் தவறு இருக்கின்ற அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த அரசு அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

ஆளுநரைப் பற்றி என்ன செய்தி சொல்ல வேண்டுமோ அதை முன்கூட்டியே தயாரித்து வந்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் இன்றைக்கு தீர்மானமாக கொண்டு வருகிறார். ஆளுநர் இப்படி பேசுவார் என்று அவருக்கு எப்படி தெரியும்? திட்டமிட்டு ஆளுநர் மீது ஒரு தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் ஒரு அறிக்கையை தயார் செய்து தீர்மானமாக கொண்டு வந்து சட்டமன்றத்தில் வாசித்திருக்கிறார். ஆளுநர் உரையில் வேறு எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஆளுநர் உரையில் ஆளுநர் உரை மட்டும் தான் இடம்பெற வேண்டும். ஆனால் முதலமைச்சர் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்? தமிழ்நாட்டில் நடக்கும் உண்மை நிலையை அறிந்து உரையை திருத்தி கொடுக்க வேண்டும் என்று தான் ஆளுநர் சொல்கிறார்” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து தேசிய கீதம் வாசிக்கப்படாததால் தான் ஆளுநர் வெளியேறிருக்கிறார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் மீது விமர்சனம் செய்வது சரியல்ல. அவர் மீது விமர்சனம் செய்வது முறையல்ல, நாங்கள் அதை செய்ததும் கிடையாது. எங்களுக்கு வேண்டியது மக்களுடைய பிரச்சனை தான். அதற்காக தான் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி திசைதிருப்பாதீர்கள்” என்று கூறிச் சென்றார்.