Advertisment

“54 மாத கால திமுக ஆட்சியில் காவல்துறை தனது கம்பீரத்தை இழந்துள்ளது” - இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

ed

Edappadi palaniswami alleged The police have lost their dignity during the 54-month DMK rule

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல் துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி, 54 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல் துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை. தீயசக்தி தி.மு.க-வின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை தமிழக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தணலில் இட்ட புழுவாக மக்கள் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாரும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கொடுமையின் உச்சம். பல ஊடகங்களின் பலத்தைப் பயன்படுத்தி, 54 மாத கால திமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற நிகழ்வுகளை மறைத்துவிடலாம்; தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என்ற மமதையில் ஆட்சியாளர்கள் இருப்பது, அவர்களின் குரூர புத்தியின் வெளிப்பாடாகும்.

Advertisment

அதிமுக ஆட்சிக் காலங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரும்பாடுபட்ட தமிழக காவல்துறை, தற்போது, நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரின் செயல்பாடற்ற நிலையினால் சீர்கெட்டிருப்பது வேதளையான ஒன்று. இந்த ஆட்சியில் நிர்வாகத் திறனற்ற காவல் துறையின் அனைத்து அவயங்களும் செயலிழந்துவிட்டதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை மருந்து புழக்கம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட அனைத்துக் குற்ற நிகழ்வுகளிலும், குற்றவாளிகளுடன் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கைகோர்த்து இருப்பதும், அவர்களைக் காப்பாற்றும் பணியில் காவல் துறை சட்டப்படி செயல்படாத நிலை மற்றும் இந்த ஆட்சியின் அவலங்களை தைரியமாக எடுத்துரைக்கும் சமூக ஊடகங்களை முடக்குவது மற்றும் சட்ட விரோத என்கவுண்டர்களில் ஈடுபடுவதும்தான் திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் சாதனை. மேலும், தங்களது குற்றங்களில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகளைக் காப்பாற்ற சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடும் இந்த திமுக அரசு, கிட்னி மாற்று முறைகேடு மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல், அவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர்களை வைத்து முறையாக வாதிடாததால், தவறிழைத்த மருத்துவமனை மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றது.

சமூக நலத்துறை அமைச்சர் தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில், 6999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு பலியாகி உள்ளனர் என்றும், அவர்களுக்கு சுமார் 104 கோடி ரூபாயை நிவாரணமாக மாநில அரசு வழங்கி உள்ளதாகவும் கூறி இருப்பது, தமிழ் நாட்டின் சட்டம்-ஒழுங்கு தோல்வியின் வெளிப்பாடா? அல்லது வெட்கக்கேடா? பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட 104 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது என்று பெருமையுடன் குறிப்பிட்டது அரசின் சாதனையா? அல்லது சட்டம்-ஒழுங்கின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதா? என்பதை அமைச்சர்தான் விளக்க வேண்டும்.  தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதையும், பெண்களின் பாதுகாப்பு முற்றிலுமாக Compromise செய்திருப்பதையும் பார்க்கும்போது, விளம்பர மாடல் திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம்கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.

‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ என்று கூறிய ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சி, சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில், தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்திலும், தொடர்ந்து எனது தலைமையிலான அரசிலும், சட்டப்படி சிறப்பாக இயங்கிய காவல்துறை, கடந்த 54 மாத கால திமுக ஆட்சியில் தனது கம்பீரத்தை இழந்துள்ளது. விடியா திமுக ஆட்சியில் நிரந்தர டிஜிபி இருந்தபோதே காவல்துறை சிறப்பாக செயல்படாத நிலையில், தற்போது காவல் துறையின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குறியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் டிஜிபி பதவி காலியானவுடன் தகுதியான காவல் உயர் அதிகாரிகள் பலர் இருக்கும் நிலையில், திமுக அரசின் தாளத்திற்கு ஏற்ப ஆடக்கூடிய ஜூனியர் அதிகாரிகளின் பெயர்களை மத்திய தேர்வாணையம் பரிந்துரைக்காத நிலையில், வேண்டுமென்றே டிஜிபி நியமனத்தை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு, தற்காலிக டிஜிபியை நியமித்துள்ளார் முதலமைச்சர்.

தமிழகத்தில் டிஜிபி நியமிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்தும், இன்றுவரை இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத திமுக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி 7.11.2025-அன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றமும் தமிழ் நாடு அரசுக்கு 3 வார காலத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிர்வாகத் திறனற்ற இந்த செயல்பாடுகளைப் பார்க்கும் போது, எம்.ஜி.ஆரின் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. ‘காட்டு புலியை வீட்டில் வைத்தாலும், கறியும், சோறும் கலந்து வைத்தாலும், குரங்கு கையில் மாலையை கொடுத்து கோபுரத்தின் மேல் நிற்க வைத்தாலும், மாறாதய்யா மாறாது, மனமும், குணமும் மாறாது’ என்ற வரிகள் ஸ்டாலினுக்கு அப்படியே பொருந்துகிறது.

நான்கரை ஆண்டு கால நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தோல்வி. குறிப்பாக, மக்களைக் காக்கும் சட்டம்-ஒழுங்கின் தோல்வியால் தமிழகம் பாதிப்படைந்து வருவதை இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அரசியல் சாசன சட்டப்படி மக்களைக் காப்பதாக உறுதிமொழி ஏற்று ஆட்சியமைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் சுயநலத்திற்காக விளம்பர மாடல் ஆட்சி நடத்துவதை தமிழக மக்கள் இனியும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் வகையில், காவல் துறை சுதந்திரமாக செயல்பட வலியுறுத்துவதோடு, மத்திய தேர்வாணைய விதிகளின்படி, அவர்கள் அனுப்பிய பட்டியலில் இருந்து ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை தலைமை டிஜிபியாக உடனடியாக நியமனம் செய்ய வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

eps Edappadi Palanisamy edappadi palanisami
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe