Edappadi Palaniswami alleged after meeting the Governor Rs. 4 lakh crore corruption under DMK rule
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (06-01-26) சந்தித்துப் பேசினார். மக்கள் மாளிகையில் ஆளுநரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.
ஆளுநரை சந்தித்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “2021ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்த பட்டியலை ஆளுநரை சந்தித்து வழங்கிருக்கிறோம். கடந்த நான்கரை ஆண்டு காலமாக திமுக அரசின் ஊழல் நிறைந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்களின் முழுமையான ஆதாரங்கள் உள்ளதால் அதற்கு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வலியுறுத்தியுள்ளோம்.
கடந்த 56 மாதங்களாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் அதிகார வர்க்கத்தின் உச்சத்தில் திமுக குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து தமிழ்நாட்டை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளியுள்ளது. வருடத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழ்நாட்டை மிக கேவலமாக நிர்வாகம் செய்து ஏற்கெனவே இருந்த கடனை விட கூடுதலாக சுமார் ரூ.4 லட்சம் கோடி அதிகரித்தது தான் திமுக அரசின் சாதனை. ஆட்சிக்கு ஒரு வருடத்திலேயே திமுக அரசு கொள்ளையடித்த 30,000 கோடி ரூபாய்யை சபரீசனும், உதயநிதியும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாக அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ வெளியானது.
ஊழல் செய்வதை தவிர, தமிழக மக்களுக்கு இவர்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக. அந்த வகையில் அரசின் பல்வேறு துறைகளில் ஊழல்கள் செய்து தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர். ஆட்சி நிர்வாகம் சீராக இல்லாமல் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. திமுக அரசின் பல்வேறு துறைகளில் சுமார் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். அந்த விசாரணை கமிஷனில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க கோரிக்கை வைத்துள்ளோம்.
என் மீது ஊழல் வழக்கு போட்டார்கள். வழக்கு போட்ட ஆர்.எஸ்.பாரதி திரும்ப பெற்றார். நிரபராதி என்று நிரூபித்துவிட்டு தான் நான் இங்கு நிற்கிறேன். இந்த ஆட்சியின் ஒரு துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளது என அரசுக்கு அமலாக்கத்துறை ஆதாரத்துடன் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை தொடர்பாக இந்த அரசு இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. அதே போல் கிட்னி திருட்டு விவகாரத்தில் முறைகேடு நடந்திருக்கிறது என்று அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசு அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. இந்த ஆட்சி அமைந்தவுடன் மடிக்கணினி கொடுத்திருந்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இப்போது கொடுக்கிறார்கள். நடைபெறுகின்ற தேர்தலில் மாணவர்களின் வாக்கு தேவை என்பதற்காக தான் இந்த மடிக்கணினி கொடுக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் படித்து முடித்ததும் மடிக்கணினி தருவதால் என்ன பயன் இருக்கிறது.
தேர்தலில் அவர்களுடைய வாக்கு தேவை அது தான் இந்த அரசின் நோக்கம். தேர்தலை நோக்கி தான் இந்த அரசு பயணம் செய்கிறது. மக்கள் படுகின்ற கஷ்டத்தை பார்த்து பொங்கல் பரிசு கொடுக்கவில்லை. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தனது செல்வாக்கை இழந்துவிட்டார்கள். திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி விஞ்ஞான முறையில் அவர்களுடைய வாக்குகளை பெறுவதற்கு தான் தந்திர முறையில் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இனிமேல் திமுக ஆட்சிக்கு வருவது இயலாத காரியம். கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் பல போராட்டங்கள் நடக்கிறது. விவசாயிகள் போராட்டம், தொழிலாளர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் என தமிழகம் போராட்ட களமாக மாறியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.
Follow Us