தமிழகத்தை மீட்ப்போம் எனும் சுற்றுப்பயணத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆத்தூர் சாலையில், அண்ணா சிலை அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், ஏற்கெனவே திமுகவால் தமிழகம் தலைகுனிந்துவிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கலைஞர் குடும்பத்தினர் இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டனர். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தனர். திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்கவில்லை.
சீர்காழி மருத்துவமனையில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த கர்பிணிகள் பிரசவத்திற்குச் சேர்ந்தனர். 27 கர்ப்பிணிப் பெண்களுக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டு சிக்கலாகியுள்ளது. மாரத்தான் மந்திரி ஓடிக்கொண்டே இருக்கிறாரே தவிர, அரசு மருத்துவமனைகளை கவனிப்பதே இல்லை. அதிமுக ஆட்சியில் ராசிபுரம் தொகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீர் வழங்குவதற்கு 932 கோடி ரூபாய் திட்டம் அறிவித்து ஆரம்பிக்கப்பட்டு, அதில் 40% பணிகள் முடிந்தன. மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பரமத்தி ஆகிய ஒன்றியங்களும் 724 கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கத் திட்டமிட்டு தொடங்கப்பட்டது.
இது அதிமுக கொண்டுவந்த திட்டம் என்பதால் திமுக அரசு திட்டமிட்டு முடக்கிவிட்டது. மின் கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். ஆண்டுக்கு 5% உயர்வு, தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் மாலை 6 முதல் 10 மணி வரை என்று தனியாக வசூலிக்கிறார்கள். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான்.
ஆண்டுக்கு 6% வரி உயர்வை மக்கள் மீது சுமத்தியது திமுக. மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது வெட்கக்கேடானது. ஆட்டுக்கு, மாட்டுக்கு, பன்றிக்கு எல்லாம் வரி போட்டார்கள். பன்றிக்கு போட்ட வரியிலும் ஊழல் செய்த ஒரே அரசு திமுக அரசு. கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சா சாக்லெட் வடிவத்தில் வந்துள்ளது. இப்போது ஆம்லேட்டில் கூட கஞ்சாவை கலக்கி போடுகிறார்கள். போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதால் இளைஞர்கள் சீரழிகிறார்கள். நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் போதை மாநிலமாக உருமாறிவிட்டது.
போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று பலமுறை நாங்கள் சொல்லியும் முதல்வர் கேட்கவில்லை. ஆனால் இப்போது, ‘மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள்’ என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்னர் சொல்லி என்ன பயன்?. எதிர்க்கட்சி சொல்லும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம். டிஜிபி ஒருவர் இருந்தார் 2.0, 3.0, 4.0 என்று ஓ போட்டுக்கொண்டே அவர் ஓய்வு பெற்றதுதான் மிச்சம். போதைப் பொருட்களை விற்பதே திமுககாரர்கள். அப்புறம் எப்படி இதனை கட்டுப்படுத்த முடியும்?” என்றார் ஆவேசமாக.