தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (12-08-25) மாலை கிருஷ்ணகிரி தொகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு திரண்டியிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, “கிருஷ்ணகிரி அ.தி.மு.கவின் கோட்டை. அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இங்கு அதிமுகவே வெல்லும் என்பதற்கு இங்கிருக்கும் மக்கள் வெள்ளமே சாட்சி. மேற்கு மாவட்டம் திமுகவின் கோட்டை, எடப்பாடி பழனிசாமி எப்படி இங்கிருந்து பயணத்தை ஆரம்பித்தார் என்று ஸ்டாலின் உடுமலைப்பேட்டையில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவருக்குத் தெரியவில்லை, மேற்கு மாவட்டம் எப்போதுமே அதிமுகவின் கோட்டை தான் என்று. 2021 தேர்தலில் கோவையில் 10 இடங்களிலும் 100க்கு 100 வெற்றி பெற்றது. கோவையில் ஆளும் கட்சி அதிமுக தான். மேற்கு மாவட்டத்தில் 100 க்கு 80% வென்று வலிமையுள்ள கட்சி என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.
ஸ்டாலினுக்குப் பதில் சொல்ல இதுதான் பொருத்தமான இடம். கோவை, திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்தது அதிமுக. திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உடுமலைப்பேட்டையில் கால்நடை ஆராய்ச்சி நிலையம், திருப்பூரில் கூட்டுக்குடிநீர் திட்டம், பாலங்கள் நிறைய கொடுத்தோம். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொண்டு வந்து விவசாயிகள் மனதில் இடம்பிடித்தோம். அதனாலே 100க்கு 100 வென்ற மாவட்டத்தை தேர்வு செய்தேன். 2021லேயே 100க்கு 100 என்றால், இன்று எங்கள் வெற்றி எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். ஸ்டாலின் பல்வேறு திட்டங்கள் அறிவித்தாராம், அந்த எரிச்சலில் நான் பேசுகிறேன் என்கிறார். உங்கள் திட்டம் ஏதாவது மக்களுக்கு உதவியாக இருக்கிறதா..? நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் என்கிறார், நாங்கள் எங்கள் ஆட்சியில் 15 லட்சம் மருத்துவ முகாம் நடத்தினோம். அந்த அதிமுக திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு வந்திருக்கிறீர்கள். தேர்தல் வருவதால் புதிய பெயரை வைத்து ஏமாற்றுகிறார். உங்களுடன் ஸ்டாலின் என்று ஒரு திட்டம், 46 பிரச்னைகள் இருப்பதாகவும், அரசு அதிகாரிகள் நேரில் வந்து மனு வாங்கி அவற்றை தீர்த்து வைப்பார்களாம். இது நடக்குமா? அடுத்தாண்டு தேர்தல் வருகிறது. இப்போதுதான் மக்களுக்கு 46 பிரச்னைகள் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார். எப்படியோ, மக்களுக்கு பிரச்னை இருப்பதையாவது ஸ்டாலினே ஒப்புக்கொண்டார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. தங்க விலை நிலவரம் போல கொலை நிலவரம் பார்க்கும் சூழல் வந்துள்ளது. சேலம் ஆத்தூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நகைக்கடையில் ஆசிட் அடித்து நகையை தூக்கிக்கொண்டு ஓடுகிறார், மக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கின்றனர். சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை. பிப்ரவரி 2 அன்று மதுரையில் போலீசார், சிவா என்பவரை குடும்பப் பிரச்னையில் வெட்டிக்கொலை செய்கிறார். பிப்ரவரி 5 அன்று சென்னை குற்றப்புலனாய்வு எஸ்.ஐ விஜயபாஸ்கர் படுகாயமடைந்து மரணம் அடைகிறார். மார்ச் 19 சிவகங்கை காளையார்கோவில் காவல் நிலைய காவலர் மலையரசன் ஆட்டோ ஓட்டுநரால் எரித்து கொலை செய்யப்படுகிறார். மார்ச் 27 மதுரை உசிலம்பட்டி ஏட்டு முத்துகுமார் கஞ்சா வியாபாரிகளால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஜூலை 25 சென்னை ஆயுதப்படை போலீஸ் எஸ்.ஐ ராஜாராமன் தகராறில் தலையில் அடிபட்டு மரணம் அடைந்தார். ஆகஸ்ட் 5 திருப்பூர் குடிமங்கலம் அருகே சிறப்பு எஸ்.ஐ சண்முகசுந்தரம் தந்தை மகன் பிரச்னையில் விசாரணையின்போது கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். காவலர்களுக்கே இப்படி நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது?
குற்றவாளிகளுக்குப் போலீஸைக் கண்டால் அச்சமில்லை. ஏனெனில் காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது. சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதே அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. இந்திய அளவில் இந்தியா டுடே நிறுவனம் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்ற விருதை துணை ஜனாதிபதி கைகளால் நான் வாங்கினேன். இப்போது போதைபொருள் விற்காத இடமே இல்லை. பல்வேறு உருவத்தில் விற்பனையாகிறது. நகரம் முதல் கிராமம் வரை தாராளமாகக் கிடைக்குது. நான் இதுகுறித்து பலமுறை எச்சரிக்கை கொடுத்தேன், சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போது ஒரு டிஜிபி 2.0, 3.0, 4.0 கஞ்சா போதை நிறுத்தப்படும் என்றார், கடைசி வரை ஓ போட்டு ரிடயர்டு ஆகிப் போய்விட்டார். இப்படி மக்களை ஏமாற்றுகின்ற அரசுதான் திமுக. எங்கள் அதிமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு காவல்துறையைக் கண்டால் அச்சம் இருந்தது. இப்போது எல்லா துறைகளிலும் ஊழல். கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் என்பதே திமுகவின் தாரக மந்திரம். டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை 1,000 கோடி ரூபாய் ஊழல் என்கிறது, 40 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு என்று சொல்லியிருக்கிறது. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து வருடத்துக்கு 5,400 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள். இதற்குக் காரணம் 10 ரூபாய் மந்திரி செந்தில் பாலாஜி, அவர் தான் கோடு போட்டார் இப்ப ரோடு போட்டு போய்கிட்டே இருக்கிறது. எனவே, நமது ஆட்கள் யாரும் தயவுசெய்து டாஸ்மாக் போகாதீர்கள்.
இது விவசாயிகள் நிறைந்த மாவட்டம். அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் பயிர்க் கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. குடிமராமத்துத் திட்டம் கொடுத்தோம். பயிர்க்காப்பீட்டில் விவசாயிகளை இணைத்து இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம். இந்த மாவட்டத்தில் கிருஷ்ணகிரி முதல் ஓசூர் செல்லும் சாலையில் 348 கோடி ரூபாயில் பிரமாண்டமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்தோம். திமுக ஆட்சியில் அதை சரியாக பராமரிப்பு செய்யவில்லை. மருத்துவர்கள், மருந்துகள் இல்லை என்கிறார்கள். இனியாவது திமுக அரசு, மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அடுத்து எங்களுடைய ஆட்சி அமைந்த பிறகு, இது சிறந்த மருத்துவமனையாக மாற்றப்படும். இங்கு மா விவசாயிகள் அதிகம். மா விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய், மாம்பழம் கிலோ 13 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக போராட்டம் நடத்தியது. இதற்கு இந்த அரசு செவிசாய்க்கவில்லை. எப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்பட்டார்களோ, அப்போதெல்லாம் உடனடியாக நிவாரணம் கொடுத்தோம். விவசாயத் தொழிலாளர்களூக்கும் நிறைய திட்டங்கள் கொடுத்தோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும்.
கொரோனா காலத்தில் ஒரு வருஷம் ரேஷனில் விலையில்லா பொருள் கொடுத்தொம், மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டோம், அம்மா உணவகத்தில் விலையில்லா உணவளித்தோம். இப்போது மின் கட்டணம் உயர்வுக்கு உதய் திட்டம் ஒப்பந்தம் தான் காரணம் என்கிறார் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா. நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட உதய் திட்டத்துக்கு நாம் இரண்டு நிபந்தனைகள் விதித்தோம். 3 மாதத்துக்கு ஒரு முறை மின்கட்டண உயர்வு, விவசாய மின் மோட்டார்களுக்கு மீட்டர் ஆகிய இரண்டு நிபந்தனைகளையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டோம். இதனை மத்திய அரசு ஏற்றதால்தான் 2017ல் கையெழுத்திட்டோம். அதன்பிறகு 2021 ஆட்சி முடியும் வரை மின் கட்டணத்தை நாங்கள் உயர்த்தவே இல்லை. இப்போது திமுக 67% மின் கட்டணம் உயர்த்திவிட்டு, வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது பொய் செய்தியை அமைச்சர் பரப்புகிறார். தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று இன்று தொழில் துறையினர் என்னிடம் கூறினார்கள். தொழில் துறை சார்ந்தவர்களுக்கு மூடுவிழா காணும் ஆட்சிதான் இது. வரிகளையும் பன்மடங்கு உயர்த்திவிட்டனர். அடுத்தாண்டு தேர்தலில் திமுக படுதோல்வி சந்திப்பது உறுதியாகிவிட்டது. அதிமுக கூட்டணி உங்களால் மிகப்பெரிய வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக் கட்சிக்கு அவர்கள் சின்னத்துக்கும் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்” என்றார்.