சேலம் விமான நிலையத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இன்னமும் தமிழகத்தில் நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று கேட்டிருந்தேன். ஒரு டிஜிபி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றால், ஏற்கனவே இருக்கிற டிஜிபி, ஓய்வு பெறுவற்கு 3 மாதங்களுக்கு முன்பாக, மாநிலத்தில் இருக்கும் தகுதியான நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட வேண்டும். இது நடைமுறை. பிறகு, மத்திய தேர்வாணையம் அதை ஆய்வு செய்து 3 பேர் கொண்ட பட்டியலை மாநில அரசுக்கு அனுப்பி வைக்கும். அதில் ஒருவரை மாநில அரசு நிரந்தர டிஜிபியாக நியமிக்கும். அதைத்தான் குறிப்பிட்டேன். இதே வழி முறைதான், அதிமுக ஆட்சியில் கடைபிடிக்கப்பட்டது. அதிமுக அரசு தகுதியான டிஜிபி பட்டியலை அனுப்பியது. 2016ம் ஆண்டு 3 பேர் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி ஆய்வு செய்து மாநில அரசுக்கு அனுப்பி, அதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்களில் ஒருவர் தான் மூத்த டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதி. அவர் ஓய்வு பெற்றபோது, இதே நடைமுறையைத்தான் திமுக அரசு கடைபிடித்தது. சைலேந்திரபாபு, டிஜிபியாக நியமிக்கப்பட்டதும் இதே முறையில்தான். அடுத்ததாக திமுக ஆட்சியில் சங்கர் ஜிவால் டிஜிபியாக நியமிக்கப்பட்டதும் இந்த முறைப்படி தான். இப்போது மட்டும் இந்த அரசுக்கு ஏன் தடுமாற்றம்..?
பொறுப்பு டிஜிபி நியமித்ததை எதிர்த்து ஒருவர் உயர்நீதிமன்றம் செல்கிறார். இது முற்றிலும் தவறு என்று நீதிமன்றம் கூறிய பிறகு மாநில அரசு ஒரு பட்டியலைத் தயாரித்து யுபிஎஸ்சிக்கு அனுப்பியது. மத்திய தேர்வாணையக் குழு, 3 பேர் பட்டியலை தமிழகத்திற்கு அனுப்பிய பின்னும், இதுவரை நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை. இந்த பட்டியல் வந்த நிலையில் ஒருவர் உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். யுபிஎஸ்சி பட்டியல் அனுப்பிய நிலையிலும், டிஜிபி நியமனத்தில் இன்னும் அரசு, காலம் தாமதம் செய்கிறது, விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 3 வாரம் கால அவகாசம் கொடுத்துள்ளது. இது தான் நிலைமை. இந்த நிலையில் சட்ட அமைச்சர் ரகுபதி, இபிஎஸ்க்கு இதுபற்றி பேச அருகதை இல்லை என்கிறார். எனக்கு அருகதை இருக்கிறது, உங்களுக்குத்தான் அருகதை இருக்கிறதா என்று தெரியவில்லை. யுபிஎஸ்சி அனுப்பிய 3 பேர் கொண்ட பட்டியலில் இருப்பவர்கள் திமுகவினருக்கு சாதகமாக இருக்க மாட்டார்கள் என கருதி, கைப்பாவையாக இந்த அரசுக்கு செயல்படமாட்டார்கள் என கருதி, இதுவரை நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை. இது தான் உண்மை. ஒரு சட்டத்துறை அமைச்சர் தவறாக பேட்டி கொடுப்பது வெட்கக்கேடான விஷயம். இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு எப்படி உருப்படும்.? உண்மைச் செய்திகளை மக்களுக்குச் சொல்ல வேண்டும். நாட்டு மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார் சட்ட அமைச்சர்.
இன்றைய தினம் முதல்வர் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் அனைத்து துன்பத்திற்கும் காரணம் இந்த அரசு அலட்சியமாக செயல்பட்டது தான். 17.10.2025 அன்று நான் சட்டமன்றத்தில் நிலவரத்தை எடுத்துச் சொன்னேன். திறமையான அரசாக இருந்தால் அப்போதே புரிந்திருக்கும். ஆனால், இது தான் பெம்மை முதல்வர் ஆளும் மாநிலமாக இருக்கிறதே. 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது என்றால் விளைச்சல் எவ்வளவு என்று அதிகாரிகளுக்குத் தெரியும். அப்படி இருக்கும் போது, முன் கூட்டியே திட்டமிட்டு, விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் வாங்கியிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. தொடர் மழையில் நெல் நனைந்திருக்காது. ஆனால் இந்த அரசு, முறையாக கொள்முதல் செய்யவில்லை. இதனால் தான் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். முழுக்க முழுக்க விடியா அரசின் மெத்தனத்தால் தான் இன்று விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நான் சட்டமன்றத்தில் பேசிய பிறகு கூட அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் நேரடியாக விவசாயிகளை சந்தித்து விசாரித்தபோது, செய்தியாளர்கள் என்னோடு தான் வந்தார்கள். அப்போது 15 நாட்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படவில்லை என்பதை நேரடியாகப் பார்த்தார்கள். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அனுப்பாமல் அடுக்கி வைத்திருந்தார்கள். குடோனிற்குச் எடுத்துச் செல்லவில்லை இது தானே உண்மை நிலை.
அதோடு தேவையான எண்ணிக்கையில் எடை போடும் ஆட்கள் நியமிக்கவில்லை. போதுமான அளவுக்கு லாரிகள் இல்லை. லாரி டீசலுக்குக் கூட பணம் கொடுப்பதில்லை என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தார்கள். ஏற்கனவே நெல் மூட்டைகள் எடுத்துச்சென்றதற்கு வாடகை பாக்கி இருப்பதாக கூறினார்கள். இவற்றை நேரடியாக எல்லா டிவிகளும் படம் பிடித்தார்கள். உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தால், மழையில் நெல் நனைந்து முளைத்து இருக்காது, விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். அரசின் கவனக்குறைவு, அலட்சியத்தாலே விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பின் 4 ஆண்டுகாலமாக, குறுவை சாகுபடி செய்த விவசாயிகளை பயிர் காப்பிட்டு திட்டத்தில் இடம் பெறச் செய்யவில்லை. இரண்டு வருஷத்திற்கு முன் வீர வசனம் பேசினார் ஸ்டாலின். நேரடியாக மேட்டூருக்கு வந்து நான் டெல்டாக்காரன் என்று தண்ணீர் திறந்து விட்டார். ஆனால் இறுதியாக நெல் அறுவடை காலத்தில் 20 நாட்களுக்கு முன், தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வீணானது. விவசாயிகள் நஷ்டம் அடைந்தார்கள், அப்போது பயிர்க் காப்பீடு திட்டத்தில், குறுவை சாகுபடி செய்த விவசாயிகளை சேர்க்காததால், மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்தார்கள். நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். நான் நேரடியாக களத்திற்குச் சென்று ஆய்வு செய்யச் சென்றேன். ஆனால் முதல்வர் விவசாயிகளின் கண்ணீரை துடைக்காமல் படம் பார்க்க போனார். நான் நேரடியாக டெல்டா மாவட்டத்திற்கு சென்றேன். தஞ்சை, திரூவாருர், நாகை சென்று விவசாயிகளை சந்சித்து ஆறுதல் சொன்னேன். முதல்வர் அழுகிய நெற்பயிர்களை அலுவலகத்தில் கையில் எடுத்து பார்க்கிறார். இப்படிப்பட்ட முதல்வரை பார்த்ததே இல்லை. அவரால் நேரடியாக விவசாயிகளை போய் சந்திக்க முடியாதா..?
நீங்கள் தான் தனி விமானம் வைத்திருக்கிறீர்களே.. நேரடியாக திருச்சி சென்று அப்படியே 2 மணி நேரத்தில் விவாயிகளை சந்தித்து இருக்கலாம். ஆனால், டிரேவில் கொண்டு வந்து அவரிடம் காட்டுகிறார்கள். அது நெற் பயிரா என்று கூட அவருக்குத் தெரியாது அப்படிப்பட்ட முதல்வர் தான் நாட்டை ஆண்டுகொண்டு இருக்கிறார். இன்று என்னைப்பற்றி பச்சை துண்டு போட்ட பழனிசாமி என்று பதிவு போட்டு இருக்கிறார். உண்மை தான், நான் விவசாயி தான். எல்லோருக்கும் தெரியும். இன்று நேற்று அல்ல நான் சட்டமன்ற உறுப்பினர் ஆன நாட்களில் இருந்து நான் விவசாயி தான். மறைக்க வேண்டியதில்லை. விவசாயிகளுக்குத் துரோகம் செய்த அரசு திமுக அரசு தான். ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு துணை நின்றார். டெல்டாவை பாலைவனமாக முயற்சி செய்தவர் இன்றைய முதலமைச்சர். டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக்கி விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தது அதிமுக அரசு. 50 ஆண்டுகாலம் காவிரி நிதி நீர் பிரச்னை தீர்க்கப்படாமல் இருந்தது. சட்டப் போராட்டம் நடத்தி, விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிடைக்க வேண்டிய பங்கு நீரை கிடைக்கச் செய்தது அதிமுக அரசு. விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பது அதிமுக அரசுதான். இரண்டு முறை விவசாயிகளுக்கு பயிர்க்கடனை தள்ளுபடி செய்தோம். அதேபோல் எப்போது எல்லாம் இயற்கை சீற்றத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டார்களோ, அப்போது பயிர்களைக் கணக்கிட்டு, வறட்சியிலும் நிவாரணம் கொடுத்தது அதிமுக அரசு. 2,248 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம். ஒரே ஆண்டில் இரண்டு முறை இழப்பீட்டு தொகை கொடுத்தோம். இது அதிமுக அரசின் சாதனை.
இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இன்று விவசாயிகள் திமுக அரசு மீது கடும் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். அதனால், ஸ்டாலின் ட்விட்டரில் என்னைப்பற்றி விமர்சித்து இருக்கிறார். இன்று மத்திய அரசு ஈரப்பதம் 22 சதவீதம் எடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம் என்று இது வரை தெரியப்படுத்தவில்லை. என்ன காரணத்திற்காக நிராகரித்தார்கள் என்று தெரிந்தால் தான், நான் பதில் சொல்ல முடியும். அரசுக்கு தானே அது தெரியும்.? துணை முதல்வர் வேகவேகமாக தஞ்சாவூர் சென்றார். அவரால் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால், அவர் அங்கு போய் விவசாயிகளை சந்திக்கவில்லை. ரயில் நிலையத்திற்குப் போனார். அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை ரயிலில் ஏற்றி வைத்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஏற்கனவே நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு போய் கொண்டிருக்கிறது, உதயநிதி அங்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. கடைசி வரை துணை முதல்வர் நேரடியாகச் சென்று விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லவில்லை. விவசாயிகளுக்கு துரோகம் செய்த அரசு திமுக விடியா அரசு. அதிமுக அரசு நன்மை செய்யும் அரசு, விவசாயிகளை பாதுக்காக்கும் அரசு’’ என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார். மத்திய வேளாண் சட்டங்களை ஆதரித்து, விவசாயிகளுக்கு எதிரான நிலையை உருவாக்கி, தமிழகத்தின் உரிமைகளையும், சுயமரியாதையும், இபிஎஸ் பாதிக்கச்செய்து விட்டார் என்று முதல்வர் குற்றம் சாட்டி இருக்கிறாரே.? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதல்வருக்கு வேளாண் சட்டங்கள் என்றால் என்னவென்று தெரியுமா?. மூன்று வேளாண் சட்டங்கள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த சட்டங்களால் தமிழ்நாடு பாதிக்காது. வடமாநிலத்தில் இருக்கிறவர்கள் மண்டி வைத்திருக்கிறார்கள், அவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். மூன்று வேளாண் சட்டங்களால் என்ன பாதிப்பு என்று முதல்வர் சொல்லட்டும், நான் பதில் சொல்கிறேன். அவருக்கு சொல்லத்தெரியாது. சட்டமன்றத்திலே நான் ஆதரிக்கும் போது கேள்வி கேட்டார். அப்போதே, என்ன பாதிப்பு என்று தெரிவியுங்கள், நான் பதில் சொல்கிறேன் என்றேன். வட மாநிலத்தில் மண்டி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே சில பாதிப்புகள் இருக்கும். அதனால் அவர்கள் போராடுகிறார்கள். தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பண்ணை திட்டம் என்று ஒன்று கொண்டு வந்தோம். சிறந்த திட்டம். தக்காளி அதிகம் விளையும் பகுதிகளில் ஒரு கால கட்டத்தில் விலை வீழ்ச்சி அடைந்தது. 1 கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையானது. விவசாயிக்கு கூலி பணம் கூட கிடைக்காது.
அப்படிப்பட்ட நிலையில் விவசாயிகளை பாதுகாக்க பண்ணைத்திட்டம் கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் ஒப்பந்தம் போட்டு, ஒரு விலை நிர்ணயம் செய்தோம். இதன்படி வேளாண் துறையில் விவசாயிகளும், வியாபாரிகளும் பதிவு செய்வார்கள். காய்கறிகள் வரும்போது, விலை நிர்ணயம் செய்வார்கள். அதன் மூலம் விவசாயிகளுக்கு நிரந்தரமான விலை கிடைக்கும். இந்த திட்டத்தை ஸ்டாலின் ரத்து செய்து விட்டார். இவர்தான் விவசாயிகளை காக்கும் முதல்வரா.? இந்த திட்டம் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு என மார்க்கெட்டிங் கமிட்டி இருக்கும். அதில் விற்பனை செய்தால் செஸ் 1 சதவீதம் வசூல் செய்வார்கள். இப்போது தமிழ்நாட்டில் மார்க்கெட் கமிட்டி சேலம் ஆத்தூரில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இப்போது கொண்டு வந்திருக்கும் சட்டத்தில் அதை வாங்கக் கூடாது. மார்கெட்டிங் கமிட்டிக்கு கொண்டு வந்து, அங்கு விற்பனை செய்தால் தான் 1 சதவீதம் செஸ் வாங்க வேண்டும். வெளியில் அதற்கு சம்மந்தப்பட்ட ஏரியாவில் எங்கு போய் வியாபாரிகள் விற்பனை செய்தாலும், 1 சதவீதம் வாங்கக்கூடாது” என்று கூறினார்.
இதையடுத்து, வேளாண் சட்டத்திற்கு நீங்கள் ஆதரவு தெரிவித்ததால், விவசாயிகள் பிரச்சனையை மத்திய அரசை கேட்க சொல்வீர்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறாரே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் தமிழ்நாட்டு விவசாயிகளுக்காகத் தான் பேச முடியும், அதனால் இங்கு பாதிப்பு இருக்கிறதா என்று தான் நான் பார்க்க வேண்டும். இங்கு தான் வாக்களித்து என்னை தேர்ந்து எடுக்கிறார்கள். ஓவ்வொரு மாநிலத்திலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. இன்று கரும்புக்கு ஒப்பந்தம் போட்டு தானே எடுக்கிறார்கள். விவசாயிகள் நடவு செய்யும் போதே ஒப்பந்தம் போட்டு குறிப்பிட்ட மாதத்தில் அந்த கரும்பை வெட்டி எடுத்து போகிறார்கள் அது போன்று தான். தமிழ்நாட்டில் எதை கொண்டு வந்தால், விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என்று பார்க்க வேண்டும். விவசாயத்தை பற்றி எனக்கு அனைத்தும் தெரியும். 50 ஆண்டுகளாக நான் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன், எனக்கு அனுபவரீதியாக தெரியும். ஆனால், இந்த முதல்வருக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. தலைவாசலில் நமக்கு நாமே திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். கரும்புத் தோட்டத்தில் கான்கிரிட் ரோடு போட்டு, அதில் சென்று ஆய்வு செய்தவர் தான் ஸ்டாலின். அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டது கிடையாது. ஜெயலலிதா காலத்திலும், அதற்கு பிறகு அதிமுக காலத்திலும், இதற்கு பின்னாளும் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அரணாக அதிமுக இருக்கும். 22 சதவீதம் ஈரப்பதம் ஒப்பதல் வழங்க கால தாமதம் செய்யப்பட்டது. நீங்கள் தான் கேட்டு வாங்க வேண்டும். எதிர்க்கட்சி தான் போராடிக்கொண்டிருக்கிறது. அது, நிராகரிக்கப்பட்ட காரணத்தை கூட திமுக அரசு சொல்ல மறுக்கிறது” என்றார்.
அதனை தொடர்ந்து, ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துவீங்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டோம். யார் ஆட்சியில் இருந்தாலும், இவர்களை போல் ஜால்ரா போடும் அரசு அதிமுக அரசு அல்ல. இதே காவிரி பிரச்சனையின் போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு காலதாமதமாகி விட்டது. இதைக் கண்டித்து, நாங்கள் நாடாளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கினோம். உங்களால் ஒரு நாளாவது நாடாளுமன்றத்தை முடக்க முடிந்ததா. நீட் குறித்து நாடாளுமன்றத்தில் பேச முடியும். அப்படி பேசினால் அவர்கள் செய்த ஊழல் வெளியில் வந்து விடும் என்று அச்சம் பயத்தில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் 100-க்கு 100 வெற்றி பெற்றோம் என்று மார் தட்டினால் போதாது. மக்களுக்காக நீங்கள் நிற்க வேண்டும். 40 எம்பிக்கள் இருந்தும் என்ன பிரயோஜனம்.? விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் 40 எம்பிக்களும் மத்திய அரசுடன் போராடி இருக்க வேண்டும், உரிமையைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கு தான் தேர்வு செய்தார்கள். நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாங்கள் கவலைப்படவில்லை. அதிமுக மக்களுக்கான கட்சி” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று கூட ஓபிஎஸ் அதிமுக ஒன்றியணைய வேண்டும், இது குறித்து டிடிவி, பேசி வருவது நல்ல விஷயம் என்று கூறி இருக்கிறார்.? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அரைச்ச மாவையே அரைக்கிறீர்கள். இவைஎல்லாம் காலம் கடந்தது, முடிந்து விட்டது. இப்போது தமிழ்நாட்டை ஆளும் கட்சி திமுக. அது தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. என்ன வேடிக்கை இது.? நாங்கள் குற்றச்சாட்டு கூறி இருந்தால் கூட பரவாயில்லை. எஸ்ஐஆர் பணி நடக்கக்கூடாது, நடந்தால் இறந்தவர் பெயர் எடுக்கப்பட்டு, வேறு இடத்திற்குச் சென்றவர்கள் பெயர் நீக்கிவிடுவார்கள், ஒவ்வொரு தொகுதியிலும் 20 முதல் 40 ஆயிரம் வாக்குகள் நீக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர் பெற்று வந்து வாக்களித்து விடுவார்கள். அதனால் தான் திமுகவினர் துடிக்கிறார்கள். நீங்கள் போட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தான் பொறுப்பு ஏற்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பிஎல்ஓ ஊழியர்களும் அரசு ஊழியர்கள்தான். இத்தனையும் தாண்டி, திமுகவினர் வீடு வீடாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். திமுக அரசு திட்டமிட்டு, அதிகாரிகளைப் பயன்படுத்தி கட்டுக்கட்டாக படிவத்தை கொடுத்து வருகிறார்கள். டெல்லியில் புகார் செய்திருக்கிறோம், தேர்தல் ஆணையர் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழகம் வருவார் என்று கருதுகிறேன். அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு திமுகவினரே படிவங்களை வாங்கி கையெழுத்து போட்டு கொடுத்து விடுகிறார்கள். இப்படியெல்லாம் முறைகேடு நடக்கிறது. இவை எல்லாமே களையப்பட வேண்டும் உண்மையான வாக்காளர்கள் அனைவரும் பட்டியலில் இடம் பெற வேண்டும்” என்றார்.
அதனை தொடர்ந்து, அதிமுகவினர் துரோகத்தின் உச்சக்கட்டம் என்று அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு கூறி இருக்கிறாரே..? என்று கேட்கப்பட்டதற்கு அவர், “பாவம், கல் எடுத்து அடிக்கிறவர்களை எல்லாம் அமைச்சர்களாக்கினால் அப்படித் தான் பேசுவார்கள். மக்கள் மீது கல் வீசி தாக்கும் அமைச்சர் எப்படிப்பட்டவராக இருப்பார்..? அவர் பேச்சை எல்லாம் ஏன் மதிக்க வேண்டும். இப்படிவர்கள் தான், தமிழ்நாட்டில் இருந்து நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள்” என்று விமர்சனம் வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/edas-2025-11-24-19-07-37.jpg)