தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று (16.08.2025) காலை முதல் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மற்றும் சென்னையில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisment

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் முகாம் அலுவலகமான ரோஜா இல்லத்தில் 07.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று சட்டமன்ற உறுப்பினருக்கான அவரது அறையிலும் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதியில் அமைச்சர் ஐ பெரியசாமியின் இல்லம் அமைந்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புடன் 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

Advertisment

மேலும் இந்த இல்லத்திற்கு அருகில் உள்ள ஆரம் காலனி பகுதியில் அமைந்துள்ள சிவாஜி நகர் என்ற பகுதியில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வசித்து வருகிறார். அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் 5 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பான புகாரில் ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அந்த புகாரின் பேரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கூறி அமலாக்கத்துறையினர் ஏற்கனவே அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் விசாரணை நடத்தியிருந்தனர். எனவே இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது திமுகவினர் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment