தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று (16.08.2025) காலை முதல் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மற்றும் சென்னையில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் முகாம் அலுவலகமான ரோஜா இல்லத்தில் 07.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதியில் அமைச்சர் ஐ பெரியசாமியின் இல்லம் அமைந்துள்ளது. அங்கும் துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புடன் 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த இல்லத்திற்கு அருகில் உள்ள ஆரம் காலனி பகுதியில் அமைந்துள்ள சிவாஜி நகர் என்ற பகுதியில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வசித்து வருகிறார். அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் 5 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமியின் கார் மற்றும் அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் பயன்படுத்தும் காரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.பெரியசாமியின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் சோதனை தொடர்பான விவரங்கள் குறித்து பிரிண்ட் எடுத்து கையெழுத்து வாங்குவதற்காக ஐபெரியசாமி வீட்டிற்குள் பிரிண்டர் ஒன்று கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன, அது குறித்து வீட்டில் உள்ள நபர்களிடம் அதிகாரிகள் கையெழுத்து வாங்குவதாகக்  கூறப்படும் நிலையில் அதற்காக பிரிண்டர் வீட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.