சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், மைக்கேல் ராஜ், ஹரீஷ், இந்த நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர்களான மாலவி ராஜா, செந்தாமரை, சந்திர கண்ணன், நாகராஜ், மனோஜ் குமார், பேச்சி முத்து ராஜா, உதயகுமார், அசோக் குமார் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதிலும் குறிப்பாக ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் இதுவரை ரொக்கமாக 60 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் 3 ஆயிரத்து 716 கிராம், வெள்ளி பொருட்கள் 57 கிராம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 123 வங்கி கணக்குகள் மற்றும் அதில் இருந்த பணம் 102 கோடி மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டன.
இந்நிலையில் ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி தொடர்பாக, சென்னை, காஞ்சிபுரம், ஆவடி உள்ளிட்ட இடங்களில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (26.11.2025) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாகச் சென்னை முகப்பேர், கிழக்கு, மடிப்பாக்கம், பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் எந்தெந்த நாடுகளுக்குச் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us