‘ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க முயன்றார்’ - ராகுல் காந்தி மீது இ.டி பகீர் குற்றச்சாட்டு

rahulsonia

ED alleges against Rahul Gandhi and sonia tried to grab assets worth Rs. 2000 crores national herrald case

யங் இந்தியன் பிரைவேட் லிமிட்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்தி வந்தது. இந்த சூழலில், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. அப்போது அந்த நிறுவனத்தை யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியது. யங் இந்தியன் நிறுவனத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் தலா 76 சதவீத பங்குகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அசோசியட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 2000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தை வெறும் ரூ.50 லட்சத்திற்கு அபகரிக்கும் நோக்கோடு ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் செயல்பட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இது தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு டெல்லி பாட்டியாலா ஹெள்ஸ் நீதிமன்றத்தில் புகார் மனுவும் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இந்த பணப் பரிமாற்றத்திற்கு மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரும், காங்கிரஸ் வெளிநாட்டுப் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா சுமன் துபேவும் உடந்தையாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு ஏற்றுகொள்ளப்பட்டதை தொடர்ந்து, ராகுல் காந்தி சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தது. மேலும் இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. அதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரிடமும் அமலாக்கத்துறை விசாரணையை நடத்தியது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அபகரிக்க விரும்பியதாக அமலாக்கத்துறை இன்று (02-07-25) டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்ட ஜெனரல் எஸ்.வி.ராஜு தெரிவித்துள்ளதாவது, “அசோசியேட்டட் ஜர்லன்ஸ் லிமிடெட் நிறுவனம் லாபம் ஈட்டவில்லை. ஆனாலும், அந்த நிறுவனத்திற்கு ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தனர். அன்றாட விவகாரங்களை நிர்வகிப்பதில் கடினமாக இருந்ததால், காங்கிரஸிடம் இருந்து அந்த நிறுவம் ரூ.90 கோடி கடன் பெற்றது. இந்த நிறுவனத்தை அபகரிக்க காங்கிரஸ் விரும்பியுள்ளது. ரூ.90 கோடி கடனுக்கு ஈடாக ரூ.2,000 கோடி சொத்துக்களை அபகரிக்க யங் இந்தியாவை உருவாக்கி சதி செய்துள்ளனர்.

சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இந்த நிறுவனத்தை கையகப்படுத்த விரும்பினர். ஆதாரங்கள் கிடைத்தால் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டப்பட்டவராக மாற்ற அமலாக்கத்துறையால் முடியும். அமலாக்கத்துறை காங்கிரஸை குற்றம் சாட்டப்பட்டவராக ஆக்கவில்லை என்பதற்காக, அதைச் செய்வதற்கான உரிமையை அது இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல” என்று கூறி அறிக்கையை டெல்லி நீதிமன்றத்தில் இன்று சமர்பித்துள்ளார். முன்னதாக, ராகுல் காந்தி குடும்பத்தினர் ரூ.142 கோடி பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறையின் இந்த குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

assets enforcement directorate national herald Rahul gandhi sonia gandhi
இதையும் படியுங்கள்
Subscribe