தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை (எஸ்.ஐ.ஆர்) நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ஆம் தேதி வெளியானது. அதில், எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆருக்கு முன் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
அதோடு வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான புதிய விண்ணப்பத்தை ஜனவரி 18ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்களைச் சேர்க்கும் விதமாகத் தமிழகம் முழுவதும் முகாம் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய சனி, ஞாயிற்றுகிழமைகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரையில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று முன்தினம் (26.12.2025) வரை சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பத்தை அளித்திருந்தனர். அதே சமயம் இன்று (28.12.2025) ஒரே நாளில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 793 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் 4 ஆயிரத்து 741 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை இருப்பதாகக் கூறி படிவம் 7 விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/28/sir-camp-model-2025-12-28-17-58-20.jpg)