Echoes of Sengottaiyan's comment - EPS vehicle blockade Photograph: (admk)
இன்று (05/09/2025) செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை நாம் அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று வெளியே சென்றவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் சென்று, இதுகுறித்து முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமானவரிடம் வலியுறுத்தினோம். ஆனால், பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கவில்லை.
வெளியே சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு வருவதற்கு எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ‘எங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று மட்டுமே அவர்கள் கூறுகிறார்கள். யார் யாரை இணைக்கலாம் என்பதை கட்சியின் பொதுச்செயலாளரே முடிவு செய்யலாம். கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும். விரைவாக முடிவெடுத்தால் மட்டுமே வெற்றி இலக்கை அடைய முடியும். ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் விரும்புகின்றனர். நான் விடுக்கும் கோரிக்கையை ஏற்றால், பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன். பத்து நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்து உள்ளவர்களை ஒன்றிணைத்து அதற்கான முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” எனத் தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையனின் கருத்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டம் கம்பத்தில் சுற்றுப்பயணத்திற்கு சென்ற நிலையில் அவரது வாகனத்தை முற்றுகையிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் 'அதிமுக ஒன்றிணைய வேண்டும்' என முழக்கம் எழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.