ஈரோட்டில் வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி வாரச்சந்தை கூடுவது வழக்கம். தென்னிந்தியாவில் புகழ்பெற்ற இந்த ஜவுளி வார சந்தையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து துணிகளை வாங்கி செல்வார்கள்.

Advertisment

அதேபோன்று நேற்று இரவு ஈரோடு காந்திஜி ரோடு, ஸ்டேட் வங்கி ரோடு, சென்ட்ரல் தியேட்டர் ஆகிய பகுதிகளில் வாரச்சந்தை கூடியது. இதில் ஈரோடு திருப்பூர் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் கடைகளை அமைத்திருந்தனர். காட்டன் சட்டைகள், சுடிதார்கள், வேட்டிகள், சேலைகள், டீ சர்ட் உள்பட அனைத்து வகையான ஆடைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு இருந்தன.

விடிய விடிய நடந்த சந்தையில் ஜவுளியை கொள்முதல் செய்வதற்காக ஏராளமான உள்ளூர் வெளியூர் வியாபாரிகள் வந்தனர். அவர்கள் தங்களது வியாபாரத்திற்கு தேவையான ஆடைகளை மொத்தமாக கொள்முதல் செய்தனர். இதைப்போல் ஓணம் பண்டிகை இந்த மாத இறுதியில் வர உள்ளதால் கேரளாவில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. ஆடி மாதம் அம்மன் கோவில்களில் வழிபாடு நடப்பதால் மஞ்சள் சிவப்பு காவி நிற பேட்டிகள் அதிகமாக விற்பனையானது. இதே கலர் சேலைகளும் அதிக அளவில் விற்பனையானது.

இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறுகையில், 'ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறக்க உள்ளதால் திருமணம் போன்ற விசேஷங்கள் அதிக அளவில் நடைபெறும். இதற்காக தற்போதே வியாபாரிகள் இங்கு வந்து துணிகளை அதிகமாக கொள்முதல் செய்கின்றனர். இதனால் சில்லறை வியாபாரம் ஓரளவு நன்றாக நடந்தது. மேலும் இந்த மாதம் இறுதியில் விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இன்று கேரளாவில் இருந்து அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இந்த வாரம் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது. சில்லறை விற்பனை 30 சதவீதம் நடைபெற்றது' என்று கூறினர்.