தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பொழிந்து வரும் நிலையில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம்  ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாகவே சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பொழிந்து வரும் பருவமழை காரணமாக ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. அந்த ஏரியை சுற்றியுள்ள சிறிய ஏரிகள் நிறைந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், கிருஷ்ணா நதிநீர் ஏரிக்கு வருவதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தேங்காய், பழம், பூக்களுடன் கொட்டும் மழையில் பூஜை செய்யப்பட்டு ஏரியில் இருந்து முதற்கட்டமாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

Advertisment