நடப்பாண்டு தீபாவளியானது வார இறுதியின் தொடர்ச்சியாக வரும் திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை (நேற்று) மாலையிலிருந்தே பலரும் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். தமிழக அரசு சார்பில் அக்.21 ஆம் தேதி செவ்வாய் கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் புத்தாடை மற்றும் பட்டாசுகள், இனிப்புகள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். இதனால் பொது இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திருச்சியில் உள்ள முக்கிய கடைவீதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
தீபாவளியை ஒட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி மருத்துவ அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது. அசம்பாவிதம் நடந்தால் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தயார் நிலையில் 120 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. அதேபோல் நாளையும் தீபாவளி அன்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.