திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “நேற்று மாலையிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளன. எங்குச் சென்றாலும் மக்கள் வரவேற்பு, திமுகவினர் உற்சாக எழுச்சி வரவேற்பு அளிக்கிறார்கள். இன்றைக்கு இந்த அரங்கத்திற்கு என்னுடைய வாகனத்திலிருந்து இறங்கி வரும்போது கூட உங்களுடைய எழுச்சியும் உங்களுடைய அன்பையெல்லாம் பார்த்துவிட்டுத் தான் வந்திருக்கின்றோம்.
முழுதாக மேடைக்கு வந்து சேருவேன் என்ற நம்பிக்கை எனக்குக் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. என்னுடைய கைகளோடு நான் வருவேனா?. முழுதாக வருவேனா?. அப்படியென்று சந்தேகம் வருகிறது. ஆனால் என்றைக்குமே கை நம்மை விட்டுப் போகாது. நான் என்னுடைய கையை சொன்னேன். உங்கள் மேல் இருக்கக்கூடிய நம்பிக்கையில் சொல்கிறேன். ஒன்றிய பாசிச பாஜகவுக்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி என்ற ஒரு அடிமை சிக்கி இருக்கிறார். இன்றைக்கு அந்த அடிமை பற்றவில்லை என்று வலை வீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
வேறு ஏதாவது புதிதாக புது அடிமை கிடைக்குமா ? என்று. புது அடிமைகள் நிச்சயமாக உங்களுக்குக் கிடைப்பார்கள். ஆனால் எத்தனை அடிமைகள் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும் ஒத்த கடைசி திமுக தொண்டன் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க நிச்சயம் கால் வைக்க முடியாது. அதை ஒவ்வொரு திமுக தொண்டரும் நிச்சயம் அதற்கான பணிகளைச் செய்வார்கள். உங்களை ஓட ஓட விரட்டுவார்கள். சமஸ்கிருத மொழியை எப்படியாவது தமிழ்நாட்டுக்கு நுழைக்க முயற்சிக்கிறார்கள். 2500 கோடி இல்லை 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் என்றைக்கும் தமிழ்நாட்டிற்குள் புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டேன் என்று தைரியமாகச் சொன்ன ஒரே முதலமைச்சர் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான்.
மற்ற மாநிலங்கள் இன்றைக்குத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன முடிவெடுக்கிறார்?. ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை அறிவித்தால் தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்றுக்கொள்கிறாரா?. இல்லையா? அவருடைய ஸ்டாண்ட் என்ன? (நிலைப்பாடு) என்ன என்று மற்ற மாநில முதலமைச்சர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த எம்ஜிஆரின் முகமே மறந்து போச்சு இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது யாரைப் பார்த்தாலும் அவர்களுடைய முகம் அமித்ஷா முகமாகவே தெரிகின்றது அந்த அளவுக்கு ஓனர்ஸ்கிட்ட விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்”எனப் பேசினார்.