வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டடிருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (02.11.2025) காலை 10.00 மணி அளவில், சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல் உணவகம் ஒன்றில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் மூலமாக வெற்றி பெறுவதற்கு பாஜக முயற்சி செய்வதாகத் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் மூலமாகப் பீகார் மாநிலத்தில் என்ன நடந்துள்ளது என்பது குறித்து பத்திரிக்கை நண்பர்களே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். இன்றைக்கு அனைத்து கட்சி கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட இருக்கின்றது. அதில் அனைத்து கட்சியின் தலைவருடைய கருத்துக்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டு தீர்மானத்தை நிறைவேற்றுவார்.
எங்கெங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் ஒன்றிய பாஜக அரசுக்கு எதுவெல்லாம் சாதகமா இருக்கிறதோ அதனை மட்டும் வைத்துக்கொண்டு, அவர்களுக்குப் பாதகமா இருக்கக்கூடிய வாக்குகளை எல்லாம் நீக்குகின்ற அந்த பணிகளில் வெளிப்படையாகவே அவர் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். தொடர்ந்து தமிழ்நாட்டில் வெல்வதற்கான வாய்ப்பு கடந்த பல வருடங்களாக பாஜகவுக்கான வாய்ப்பு கிடைக்க மக்கள் அந்த வாய்ப்பை அவர்களுக்குக் கொடுக்கவில்லை. எனவே இதனை (எஸ்.ஐ.ஆர்.) பயன்படுத்தி எப்படியாவது அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதுதான் எங்களுடைய (திமுக) கருத்து” எனத் தெரிவித்தார்.
Follow Us