சென்னை திமுகவின் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வட்டம், பாக இளைஞர் அணி நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான அறிமுகக் கூட்டம் நேற்று (18.08.2025) மாலை அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார். அப்போது அவர் அக்கட்சியின் நிர்வாகிகளிடையே பேசுகையில், “இன்றைக்குத் திமுக அரசும், நம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு வருகிறார்கள். இந்தியாவும் இன்றைக்குத் தமிழ்நாட்டைப் பாராட்டிக்கொண்டு இருக்கிறது.
அது பொறுக்காமல்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழக அரசிற்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. மாநிலத்தின் நிதி உரிமையைத் தொடர்ந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள். புதியக் கல்விக் கொள்கை மூலம் இந்தித் திணிப்பு, தொகுதி மறுவரையறை என இவற்றை எல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கிற இந்தியாவிலேயே ஒரே தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு `ஓரணியில் தமிழ்நாடு’ மூலமாக 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை திமுகவில் இணைத்திருக்கிறீர்கள் இதைப் பார்த்து, அ.தி.மு.க-வுக்கும் - பா.ஜ.க-வுக்கும் பயம் வந்துவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைக்கு எங்குச் சென்று பேசினாலும், ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தைப் பற்றித்தான் அவர் பேசுகிறார்.
அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி திரும்பவும் வந்தால், தமிழ்நாட்டுக்குள் மீண்டும் இந்தித் திணிப்பு வரும், தொகுதி மறுவரையறை வரும், புதியக் கல்விக்கொள்கை வரும். ஆகவே, பா.ஜ.க. - அ.தி.மு.க-வை வீழ்த்துவதற்கான போரில், திமுக இளைஞர் அணி முன்வரிசையில் நின்று களம் காண வேண்டும். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், குறைந்தது 200 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றிபெறவேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இலக்கு கொடுத்துள்ளார்” என்ப் பேசினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், காரப்பாக்கம் கணபதி, பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார், திமுக மாநில இளைஞர் அணித் துணைச் செயலாளர் ஜோயல் எனப் பலரும் கலந்துகொண்டனர்.