தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்து திமுக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில்  சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். அந்த வகையில், இன்று (23.09.2025) விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப  ஆலோசனைகளையும்  வழங்கினார் உதயநிதி.

Advertisment

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி, காஞ்சிபுரத்தில், பேரறிஞர் அண்ணாவின் இல்லத்திலிருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இந்தப் பயணம், திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கும், அவர்களின் கருத்துகளைப் பெறுவதற்குமான ஒரு முக்கிய முயற்சி. இதன் ஒரு பகுதியாகத்தான் அவர் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்து நிலை  நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இந்த நிலையில், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தார் உதயநிதி.

அப்போது பேசிய அவர், “மாநில உரிமைகளைப் பாதுகாக்க, இந்தியாவிலேயே பாசிச பாஜகவை எதிர்த்துப் போராடக்கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மட்டும் தான். நமது முதல்வர்தான் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ‘ரோல் மாடலாக’ இருக்கிறார். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சியை அடைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதனால் தான் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்து வருகிறது. எவ்வளவு பிரச்சனைகளைக் கொடுத்தாலும், தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுகிறதே என்று சங்கிகளும் அவர்களது அடிபொடிகளும் எரிச்சலடைகிறார்கள். அதனால் தான் நாள்தோறும் புதுப்புது பிரச்சனைகளைக் கொண்டுவருகிறார்கள். எதையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு இருக்கிறது. 

அதிமுகவில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அணி உருவாகிறது. இப்போது செங்கோட்டையன் அணி உருவாகியிருக்கிறது. அவர் ஹரிதுவார் போகிறேன் என்று சொல்லிவிட்டு அமித்ஷாவைச் சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் 4 கார்கள் மாறி அமித்ஷாவைச் சந்திக்கிறார். வெளியில் வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வருகிறார். பத்திரிகையாளர்கள் படம் பிடித்துப் போட்டதும், முகத்தைத் துடைத்தேன் என்கிறார். ஏசி காரிலேயே முகம் வியர்க்கிறது என்றால், அப்படி வியர்க்கும் அளவுக்கு என்ன நடந்தது?. வடிவேலு படக் காமெடியில் வருகிற பேக்கரி டீலிங் நடந்திருக்கிறது. அமித்ஷா தான் தங்களது தலைவர் என்று அதிமுக தலைவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். திமுக கூட்டணி உடைந்துவிடாதா என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி, அனைத்துத் தலைவர்களுடனும் அரவணைத்துச் செல்லக்கூடிய தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவார். அதனால்தான் திமுக கூட்டணி இத்தனை ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்து வெற்றிகளைப் பெற்று வருகிறது. வருகின்ற தேர்தலிலும், யாரை வேட்பாளாராக நிறுத்தினாலும் அவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும்” என்றார்.

Advertisment