திராவிட இயக்க எழுத்தாளரும், திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் செயலாளராக பணியாற்றி, மறைந்த திருவாரூர் அர. திருவிடத்தின் நினைவேந்தல் கூட்டம்  திருவாரூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் இன்று (19.12.2025) நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “திமுக என்பது ஐயா திருவிடம் போன்ற லட்சக்கணக்கான தன்னலமில்லாத தொண்டர்களைக் கொண்ட ஒரு இயக்கம் ஆகும். உங்களுடைய மிரட்டலுக்கு எல்லாம் திமுகவுடைய தலைமை அல்ல, திமுகவுடைய அடிமட்ட தொண்டன் கூட என்றைக்கும் பயப்பட மாட்டான். 

Advertisment

இன்றைக்குப் பாசிச சக்திகள் பழைய அடிமைகள் பத்தாது என்று புது புது அடிமைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடித்து அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு  வருகிறார்கள். தேர்தல் நேரத்தில்  கண்டிப்பாக  திமுகவை எதிர்க்க வருவார்கள். அவர்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுடைய ஆதரவோடு ஓட ஓட விரட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. திமுக தொண்டனுக்கு இருக்கின்றது. யாருக்கு இருக்கின்றதோ  இல்லையோ திமுகவிற்கு அதிகமாக இருக்கின்றது. எனவே 2026ஆம் ஆண்டு நடக்க உள்ள தேர்தல் ஒரு சாதாரண தேர்தல் கிடையாது. 

Advertisment

anna-arivalayam

இது தமிழ்நாட்டுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற ஒரு தேர்தல். இது சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் நடக்கிற தேர்தல். சமூக நீதிக்கும் சமூக அநீதிக்கும் இடையே நடக்கின்ற ஒரு தேர்தல். மாநில உரிமைகளுக்கும் டெல்லி சர்வாதிகார அதிகாரிகளுக்கும் நடக்கின்ற ஒரு தேர்தல். ஆகவே 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அணி குறைந்தது 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவோம். அதற்குத் தமிழ்நாடு முழுவதும் உள்ள 70 ஆயிரம் வாக்குச்சாவடியிலும் நிச்சயம் உதய சூரியன், கூட்டணி சின்னம் ஜெயித்தாக வேண்டும். உதய சூரியன் உதித்தாக வேண்டும். அதற்கு ஒரு தொடக்கமாகத் திருவாரூர் மாவட்டம் நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது” எனப் பேசினார்.