சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கப்படுவதன் முகமாக 100 சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று (16.9.2025) நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.எம். செல்வகணபதி, கே.இ. பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. அருள் (ராமதாஸ் ஆதரவாளர்) , எஸ். சதாசிவம் (அன்புமணி ஆதரவாளர்), மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திரன், மாநகராட்சி துணை மேயர் மா. சாரதாதேவி எனப் பலரும் கலந்துகொண்டனர். அப்போது முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இங்குள்ள 2 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவினர் கிடையாது. கூட்டணிக் கட்சியோ கூட கிடையாது. இப்போது கிடையாது.
மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருளும், சட்டமன்ற உறுப்பினர் சதாசிவமும் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. அதற்கு என்னுடைய நன்றி என்று போட்டிப் போட்டுக்கொண்டு பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் ஒற்றுமையாகப் பாராட்டி இருக்கிறார்கள். இதே ஒற்றுமையோடு அவர்கள் எப்பொழுதுமே இருக்க வேண்டும். சிறப்பான மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று நான் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்” எனப் பேசினார். பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சித் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.