திமுகவின் 75வது ஆண்டு நிறைவைடைந்ததையொட்டி அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில், “திமுக 75 அறிவு திருவிழா” என்ற நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 08ஆம் தேதி (08.11.2025) காலை தொடங்கியது. இந்நிகழ்ச்சியை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை அவர் வெளியிட்டார். அதனை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக்கொண்டார். 

Advertisment

இந்நிலையில் அக்கட்சியின் தொண்டர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘அறிவுத்திருவிழா - இது கொள்கைக்கு கிடைத்த வெற்றி’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கடிதத்தில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக இளைஞர் அணியின் சார்பில் நடத்தப்பட்ட ‘அறிவுத்திருவிழா’வில், ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியீட்டு விழாவையும் ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தையும் மிகச்சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம். எழுத்தாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் பலரும், தனிப்பட்ட முறையிலும் செய்தி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இளைஞர் அணியின் ‘அறிவுத்திருவிழா’வைப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.

Advertisment

திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினின் சீரிய தலைமையின் வழிகாட்டலில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,  கலைஞர் ஆகியோரின் கொள்கைப் பாதையில்தான்  பயணம் தொடர்கிறது என்பதற்கான உரைகல்லே இந்த அறிவுத்திருவிழா. தி.மு.கழகம், வெறுமனே தேர்தலை நோக்கி மட்டும் சிந்திக்கும் அரசியல் கட்சியல்ல. தந்தை பெரியாரின் கொள்கைகளைச் சட்டவடிவமாக்க, சமத்துவத்தையும் சமூகநீதியையும் நிலைநாட்ட, தேர்தல் ஜனநாயகத்தின்மூலம் மக்கள்பணி செய்யும் இயக்கம். அதனால்தான், தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணிகூட அமைக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளை இணைத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் உருவாக்கியிருக்கும் வலிமையான கூட்டணி, உறுதியுடன் தொடர்வதுடன், தேர்தல் பணிகளுக்கான குழுக்களை அமைத்து, வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டங்களை நடத்தி, தலைமைக் கழகத்தைப் போலவே இளைஞர் அணிக்கும் வாக்குச்சாவடி வரை நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளை ஆற்றுகிறோம்.

dmk-75-arivu-thiruvizha-book-release

அதே நேரம் கொள்கைப் பணிகளை முன்னெடுக்கும் அறிவுச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக ‘அறிவுத்திருவிழா’வையும் நடத்தியிருக்கிறோம். ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல், முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரண்டே நாட்களில் 6,000 பிரதிகள் விற்றிருக்கின்றன. முன்வெளியீட்டுத் திட்டம் மகத்தான வெற்றியடைந்திருக்கிறது. மேலும், நம் அறிவுத்திருவிழாவின் ஒரு பகுதியான ‘முற்போக்கு புத்தகக் காட்சி’யில் அமைந்திருக்கும் ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ அரங்கத்திலும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலைப் பலரும் வாங்கிச்சென்றிருக்கின்றனர் என்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment