சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணையர்களுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (14.09.2025) திருமணத்தை நடத்தி வைத்தார். அதோடு, பரிசுப் பொருட்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பேசுகையில், “எனக்கு பக்கத்தில் அமர்திருக்கும் இணையர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். மணமகனின் பெயர் சந்தோஷ், மணமகளின் பெயர் லட்சுமி. சந்தோஷிடம் எப்படிப்பா பெண்ணை தெரியும் என்று கேட்டேன்.

Advertisment

நான் நினைத்திருந்தது போலவே. அவர் தனக்கு காதல் திருமணம் என்று தெரிவித்தார். எப்படிப்பா பழக்கம் என்று கேட்டேன். ஒரு வருடமாக ஒரே இடத்தில் வேலை செய்கின்றோம் என்று தெரிவித்தார். மிகுந்த மகிழ்ச்சி. ஏனென்றால் காதல் திருமணத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தும் எனக்கும் தெரியும். எனக்கும் காதல் திருமணம்தான். முதலில் பெண் ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நிறைய கஷ்ட படவேண்டும். பிறகு பெண்ணின் அப்பா, அம்மா ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களை சமாதானப் படுத்தவேண்டும். அதற்கு அடுத்து பெண்ணின் மாமா, சித்தப்பா என்று எல்லோரும் கிளம்பி வருவார்கள். ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்து விடுவார்கள். அவர்கள் அனைவரது சம்மதத்தையும் வாங்கிய பிறகு, பெண் முடியாது என்று மறுத்துவிடுவார். 

இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த பிரச்சினைகளையெல்லாம் சமாளித்து, இன்றைக்கு இந்த திருமணங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறுகின்ற திருமணங்களில் பெரும்பாலான திருமணங்கள் காதல் திருமணங்கள்தான். எனவே இது அறநிலையத்துறையா, அன்பு நிலையத்துறையா என்கின்ற வகையில் அவ்வளவு காதல் திருமணங்களை அமைச்சர் சேகர்பாபு நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்த இணையர்களை பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி. எல்லோருமே நன்கு படித்துள்ளார்கள். அது கூடுதல் மகிழ்ச்சியை தருகின்றது. 50, 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் இது சாத்தியமில்லை. மணமக்கள் உங்களுடைய அப்பா அம்மா அல்லது தாத்தா பாட்டியின் திருமண பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால், அதில் அவர்கள் படித்து வாங்கிய பட்டம் இருக்காது. மாறாக சமுதாய பெயர், அவர்களுடைய சாதிபேர் தான் இருந்திருக்கும். ஆனால், இன்றைக்கு சாதி பெயர்கள் இருப்பதில்லை. 

மணமக்கள் படித்து வாங்கிய பட்டங்களின் பெயர்கள்தான் இருக்கின்றன. இந்த பெருமை தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் இருக்கின்றது.இதற்கு காரணம், திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தான். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் நடத்திய பல்வேறு போராட்டங்களின் காரணமாகத்தான் இத்தனை சீர்திருத்தங்களும் தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு வந்து இருக்கின்றது” எனப் பேசினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் த. வேலு, ஜெ. கருணாநிதி, மணமக்களின் உறவினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.