இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதி (20.10.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.
இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை பிராட்வேயில் திமுக சார்பில் தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா நேற்று (16.10.2025) நடைபெற்றது. இதில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பரிசுப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இந்த விழாவில் கலந்துகொண்ட சிலருக்கு என்ன சொல்லி வாழ்த்துவது என்றே தெரியவில்லை. தீபாவளி திருநாள் என்று சொல்லலாமா? வேண்டாமா? சொன்னால் இவர் ஏதாவது கோபம் கொள்வாரா? என்று சில பேர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என்று கூறினார்கள். நான் சொல்கிறேன் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்” எனப் பேசினார். இதனையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.