கரூர் அருகேயுள்ள கோடங்கிபட்டியில் இன்று (17.09.2025) திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக துவங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றும் செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது என்பதால், இம்மூன்று நிகழ்வையும் சேர்த்து, ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. 

Advertisment

இவ்விழாவில் தமிழக துணை முதல்வரும்,  திமுகவின் இளைஞரணிச் செயலாளாருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “முதன்முறையாக வழங்கப்படவுள்ள முரசொலி செல்வம் விருது ஏ.எஸ். பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்படுகிறது. முரசொலி செல்வம் பெயரிலான முதல் விருது மிகச் சரியான விருதாளர்களுக்கு சென்று சேருகின்றது. ஏ.எஸ். பன்னீர் செல்வம் சுமார் அரை நூற்றாண்டு காலம் பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்றவர். இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகைகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ராய்ட்டர்ஸ் பெல்லோவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒன்றிய மாநில அரசு உறவுகள் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டவர். 10 ஆண்டுகள் தெற்காசிய ஊடக வளர்ச்சி நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டராக ஏ.எஸ். பன்னீர்செல்வம் சிறப்பாகச் செயல்பட்டார். 

Advertisment

குளோபல் பார்மர் மீடியா டெவலப்மென்ட் துறைத் தலைவராகச் சிறப்பாக பணியாற்றினார். இந்தியா முழுவதும் பல அடுத்த தலைமுறை இளைஞர்களைப் பத்திரிகையாளர்களாக உருவாக்கிய ஆற்றலுக்கும், பெருமைக்கும் சொந்தக்காரர் தான் ஏ.எஸ். பன்னீர்செல்வம். தமிழ்நாடு அரசு புதிதாக நிறுவியுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தினுடைய தலைமை இயக்குநராக சிறப்பாக பணியாற்றி வருகின்றார். இது அனைத்திற்கும் மேலாகக் கலைஞருடைய வாழ்க்கை வரலாற்று நூலைக் கலைஞர் லைஃப் என்ற புத்தகமாக எழுதியவர். கலைஞருடைய பெருவாழ்வை தன்னுடைய புத்தகத்தின் மூலமாக உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர்தான் ஏ.எஸ். பன்னீர் செல்வம். 

அவருக்கு 2025ஆம் ஆண்டிற்கான முரசொலி செல்வம் விருது வழங்கப்படுவதில் முரசொலி அறக்கட்டளை மிகுந்த பெருமை அடைகின்றது. மகிழ்ச்சி அடைகின்றது. அதேபோன்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட விருது பெற்றுள்ள திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட அத்தனை விருதாளர்களுக்கும் வாழ்த்துக்கள். திமுகவிற்கு எவ்வளவோ சிறப்புகள் உண்டு. வரலாறுகள் உண்டு. அந்த வரலாறுகளின் வரிசையில் கரூர் முப்பெரும் விழாவும் நிச்சயம் இடம்பெறும். கலைஞர் முதன்முதலாக நின்று வென்ற இந்த கரூர் மாவட்டத்திலிருந்து தொகுதியிலிருந்து 2026கான திமுகவின் வெற்றி கணக்கைத் துவங்குவோம் வெல்வோம் 200. படைப்போம் வரலாறு” எனப் பேசினார்.

Advertisment