சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது ‘தமிழ்நாடு போராடும்’ என்று சுவர்களில் எழுதியுள்ளார்கள். தமிழ்நாடு யாருடன் போராடும்?. தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை. எனவே தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்” எனப் பேசியிருந்தார். அதே சமயம் திமுகவின் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பெரியாரிய சிந்தனையாளரும், திராவிட இயக்க பற்றாளருமான வே. ஆணைமுத்துவின் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “பெரியார் தொண்டர்களுடைய அந்த தன்னலம் இல்லாத உழைப்புதான் இன்றைக்குத் தமிழ்நாட்டைச் சுயமரியாதையின் மண்ணாக மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறது. கிண்டியில் இருக்கக்கூடியவரும், தமிழ்நாட்டுடைய ஆளுநரான ரவி என்று ஒருவர் இருக்கின்றார். நம்முடைய நண்பர்தான் அவர். அவர் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். பாசிச பாஜகவுக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக நினைத்துக்கொண்டு நமக்கு (திமுக) செய்து கொண்டிருக்கிறார். 3 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று பேசி இருக்கிறார். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று தமிழ்நாட்டில் எங்கே சென்றாலும் இதே குரலாக இருக்கிறது.
எந்த சுவரைப் பார்த்தாலும் இதை எழுதி வைத்திருக்கிறீர்களே ?. யாரை எதிர்த்துப் போராடப் போகிறீர்கள் என்று ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். நான் ஏற்கனவே அவருக்கு ஒரு பதிலைச் சொல்லியிருக்கின்றேன் இருக்கின்றேன். ஆளுநர் ரவி அவர்களே உங்களோடு தான் தமிழ்நாடு போராடும். உங்களை வென்று காட்டுவோம். பெரியார் தொண்டர்கள் நிறைந்திருக்கிற இந்த அரங்கத்தில் நான் இன்னும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகின்றேன். மாநில உரிமைக்காகத் தமிழ்நாடு போராடும். சமூக நீதியைக் காக்கத் தமிழ்நாடு என்றும் போராடும். மத வெறியை, சாதிவெறியை எதிர்த்து தமிழ்நாடு நிச்சயம் போராடும்.
இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு தொடர்ந்து போராடும். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒன்றிய பாசிச பாஜகவை எதிர்த்து தமிழ்நாடு என்றைக்கும் போராடும். இன்றைக்கு ஆளுநர் ரவி பேசும்போது போது குறிப்பிட்டுப் பேசுகிறார். அவர் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறாராம். தமிழ் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்துக்கொண்டு இருக்ககிறாரம். நீங்கள் (ஆளுநர் ஆர்.என். ரவி) தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்கிறீர்களே அதற்குத் தமிழ்நாடு போராடியது தான் முக்கியமான காரணம். அன்னைக்குத் தமிழ்நாடு போராடாமல் இருந்திருந்தால் ஆளுநர் ஆர்.என். ரவி இன்றைக்குத் தமிழில் பேசி இருக்க மாட்டார். நாம் எல்லாம் இந்தியில் பேசிக் கொண்டு இருந்திருப்போம்” எனப் பேசினார்.