தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (14.10.2025) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் நாளை (17.10.2025) வரை நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் தான் 3ஆம் நாள் கூட்ட நிகழ்வுகள் இன்று (16.10.2025 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், “இதுவரைக்கும் மகளிர் உரிமைத்தொகை வேண்டி 28 லட்சம் மகளிர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நவம்பர் 14ஆம் தேதி முடிய உள்ளது.
இதற்கிடையே புதிய உரிமை தொகை கோரி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை வருவாய்த் துறை மூலமாக பீல்ட் இன்ஸ்பெக்ஷன் (கள ஆய்வு) செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிவடையும். முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களுடைய அடிப்படையில் தகுதியான மகளிருக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முடிவெடுத்திருக்கிறார். இந்தச் செய்தியை இந்த மாமன்றத்தின் மூலமாக நான் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். தமிழ்நாட்டு மக்களுடைய பொருளாதார தன்னிறைவுக்கு என்றும் திராவிட மாடல் அரசு துணை இருக்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2023ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இத்திட்டம், வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கூடுதல் மகளிர்க்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது என்கிற மகிழ்ச்சியான அறிவிப்பை சட்டப்பேரவையில் இன்று அறிவித்தோம். தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட 28 லட்சம் புதிய விண்ணப்பங்களில், விதிகளைப் பூர்த்தி செய்யும் மகளிர் அனைவரும் உரிமைத் தொகை பெறுவார்கள். மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்ய என்றும் அயராது உழைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.