தமிழ்நாடு அரசு சார்பில் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (11.10.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் எப்போதுமே கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடுகின்ற ஒரு இயக்கம். தமிழ்நாட்டு மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த கலையையும், ஒரு கருவியாக பயன்படுத்தியவர்கள் தான், நம்முடைய திராவிட இயக்க தமிழ்நாட்டு தலைவர்கள்.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் நாடகத் துறையிலும், திரைத் துறையிலும் முத்திரை பதித்தவர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் திரைப்படங்களிலும். நாடகங்களிலும் நடித்திருக்கின்றவர்தான். இன்றைக்கும் இசையையும், நாடகங்களையும், திரைப்படங்களையும் ரசிக்கக் கூடியவர் தான் நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். எனவே தான், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் நடத்துகின்ற அத்தனை நிகழ்ச்சிகளையும், அதனுடைய செயல்பாடுகளையும் தொடர்ந்து அவர் ஊக்கப்படுத்தி வருகின்றார்.
இந்த தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்திற்கும், கலைமாமணி விருதுக்கும், கலைஞருக்கும் இந்த அரங்கத்திற்கும் மிக, மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இங்கே வாகை சந்திரசேகர் குறிப்பிட்டது போல, சங்கீத நாடக சங்கம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் என்று மாற்றியமைத்தவர் கலைஞர் தான். இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டியதும் கலைஞர் தான். அதே போல் ஆரம்பத்தில், 'கலா சிகாமணி', என்ற பெயரில் தான் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அதை கலைஞர் தான் பெயர் மாற்றம் செய்து "கலைமாமணி விருது" என்று அறிவித்தார்” எனத் தெரிவித்தார்.