சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகையில், “மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்தால் மட்டும் பத்தாது, உயர் கல்வி படிக்க வேண்டும். காலேஜ் போக வேண்டும். அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி சேருகின்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், மாணவனாக இருந்தால் தமிழ்ப் புதல்வன் திட்டம், மாணவியாக இருந்தால் புதுமைப் பெண் திட்டம். 

Advertisment

ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி வருகின்றார். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 16 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 8 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள். சமீபத்தில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வந்தார். அவர் பாராட்டி சொன்னார். அடுத்த கல்வியாண்டில் இருந்து தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தை தெலுங்கானா மாநிலத்தில் நான் தொடங்கப் போகிறேன் என்று, மற்ற மாநில முதலமைச்சர்கள் எல்லாம் வந்து பாராட்டக்கூடிய முதலமைச்சராக, ஒரு அரசாக, ஒரு மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. 

Advertisment

அதனால்தான், இன்றைக்கு இந்தியாவிலேயே நம்பர் 1 முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் அந்த சிறப்பை பெற்றிருக்கிறார். பொருளாதார வளர்ச்சியில் எந்த மாநிலமும் நினைத்து பார்க்கமுடியாத இரட்டை இலக்கம். 11.19 சதவீத வளர்ச்சியோடு, இன்றைக்கு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக  தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது என்றால் நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தான் காரணம். அதுமட்டுமல்ல. இன்றைக்கு இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கக்கூடிய ஒரு திட்டம், அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு, கடந்த 26 மாதங்களாக மாதம் 1,000 ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்” எனப் பேசினார்.