Durai Vaiko said Vijay will not join alliance with BJP
மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, இன்று (30-12-25) புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை பொறுத்தவரை, பிற கூட்டணியை பற்றியோ பிற கட்சிகளை பற்றியோ கவலைப்படவில்லை. ஒன்றிய அரசு நமக்கு போதிய நிதியை வழங்குவதில்லை. இருந்தபோதிலும், ஏழை எளிய மக்கள் பயன்பெறுகிற வகையில் மாநில அரசு பல நலத்திட்டங்களை நிறைவேற்றிருக்கிறது. மக்களுக்கு செய்திருக்கிற பணிகள் மூலம், நாங்கள் இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறோம். வலிமையாக இருப்பதாக விஜய் சொல்வது என்பது அவருடைய ஜனநாயக உரிமை” என்று பேசினார்.
இதையடுத்து திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கேட்கிறார்கள், மதிமுகவின் நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துரை வைகோ, “திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவான கூட்டணி. கிட்டத்தட்ட 8 வருடங்களாக வலுவான கூட்டணியாக இருக்கிறோம். கடந்த தேர்தலில் மக்கள் ஆதரவு பெற்று வெற்றி பெற்றிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரைக்கும், கூட்டணியில் பங்கு கேட்கவில்லை, விரும்பவும் இல்லை. இந்த நேரத்தில் கூட்டணி மந்திரி சபையை கேட்டு ஒரு குழப்பத்தை உருவாக்கி கூட்டணிக்குள் ஏதாவது ஒரு குழப்பம் வருமா என்று இரண்டு மூன்று வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்கள். அதற்கு இது காரணமாக இருக்கக்கூடாது.
ஆனால், பிற இயக்கங்கள் கேட்பது என்பது அவர்களுடைய உரிமை. தேர்தல் நேரத்தில் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கும். ஆனால் கூட்டணியில் எந்தவித விரிசல் வராது என்பது எனது நம்பிக்கை. சகோதரர் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆதரவு இருக்கிறது, அதை மறுக்க முடியாது. அவர் அதிமுக, பா.ஜ.கவுடன் கூட்டணி சேரப்போவது இல்லை. ஏனென்றால் அவர் பா.ஜ.கவை கொள்கை எதிரி என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்” என்று கூறினார்.
Follow Us