Durai Vaiko said There is no joy in politics, every day is torture
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சிப்பிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மதன்ராஜ், மியான்மர் நாட்டிற்கு வேலைக்காக சென்ற நிலையில், அங்கு முறையான பணி மற்றும் உணவு வசதி இன்றி தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி சித்திரவதைக்கு ஆளானார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, வெளியுறவு துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மதன்ராஜ் மற்றும் அவருடன் இருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் மூவர் பத்திரமாக தாயகம் திரும்ப உதவினார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சிப்பிப்பாறை கிராமத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் பேசிய துரை வைகோ, “எனக்கு அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் விருப்பம் இல்லை. ஆனால் கால சூழ்நிலை காரணமாக அரசியலுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. தலைவர் வைகோ மற்றும் மதிமுக இயக்கத்தின் விருப்பத்திற்கு இணங்கி அரசியலுக்கு வந்தேன். இயக்கத்தில் முக்கியப் பொறுப்பும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் எதிர்பாராத பொறுப்புகளும் கிடைத்துள்ளன. இன்றைய அரசியல் சூழலில் பதவிக்கு வர முதலீடு, சாதி, மதம் போன்றவை முக்கியமாக பார்க்கப்படுகின்றன. ஆனால் எனக்குப் பொது சேவை நிறைந்த வாழ்க்கையே அரசியல் எனும் நம்பிக்கை உள்ளது. அரசியலுக்கு வரும் முன் இறை நம்பிக்கை குறைவாக இருந்தாலும், தற்போது அது அதிகரித்துள்ளது. கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்த பின் அவர்கள் தெரிவிக்கும் நன்றியே எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது.
அரசியலில் நல்லவர்களை கட்சி பார்க்காமல் ஆதரிக்க வேண்டும். மதிமுக சரியாக செயல்படவில்லை என்றால் எங்களையும் நிராகரியுங்கள். சாதி, மதத்தை கடந்து நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும். நான் மதிக்கும் தலைவர்களில் முதன்மையானவர் நல்லகண்ணு, அதற்கு அடுத்தபடியாக தலைவர் வைகோ. ஒவ்வொரு கிராமத்திலும் தாய்மார்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால், அரசியலில் நல்ல இளைஞர்கள் அதிக அளவில் வர முடியும். மக்கள் மனதில் மாற்றம் வந்தால் அரசியல் கட்சிகளிலும், தலைமைகளிலும் மாற்றம் ஏற்படும். அரசியலில் நான் சந்தோஷமாக இல்லை. ஒவ்வொரு நாளும் சித்திரவதை அனுபவிப்பது போல உள்ளது. எப்போது அரசியலை விட்டு விலகலாம் என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” இவ்வாறு அவர் கண்கலங்கிப் பேசினார்.
Follow Us