விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ முன்னிலையில் ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்றது. நெல்லை மண்டலத்தில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வைகோ பேசும்போது, அவரது உரையைக் கேட்காமல் சிலர் வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், சில நாற்காலிகள் காலியாக இருந்ததைப் பத்திரிகையாளர்கள் செய்தியாகப் பதிவு செய்தனர். இதைக் கவனித்த வைகோ, செய்தியாளர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். அதன்படி, கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களை வெளியேற்றினர். அப்போது, நிர்வாகிகளுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் இரு பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட மதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக பத்திரிகையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரைவைகோ நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், “இந்த ஆலோசனை கூட்டத்தில், மூன்றாயிரம் பேர் திரண்டு வந்ததால் மண்டபம் நிறைந்து, வெளியே ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து இருந்தனர். பொதுச்செயலாளர் வைகோ, இரவு 8 மணிக்கு பேசத் தொடங்கி ஒரு மணி நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால், மண்டபத்துக்கு உள்ளே இருந்த தொண்டர்கள் சிலர் எழுந்து வெளியே சென்றனர். சற்று நேரத்தில் மின்சாரம் வந்ததும் வைகோ பேசத் தொடங்கினார். அந்த நேரத்தில் ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு செய்ததை பார்த்த வைகோ, "மாலை நான்கு மணி அளவில் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஐந்து மணி நேரமாக உள்ளே அமர்ந்திருக்கின்றனர். மின்சாரம் தடைப்பட்டதும் சற்று நேரம் வெளியே சென்றபோது படம் எடுக்கிறீர்களே, வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கிறார்களே, அங்க போய் படம் எடுப்பீர்களா? "என்று கேட்டார்.
தொடர்ந்து ஒளிப்பதிவு செய்ததால் ஊடகவியலாளர்கள் வெளியே செல்லலாம் என்று வைகோ அறிவுறுத்திய போது சில தொண்டர்கள் ஆத்திரமடைந்தனர். அதன் பின்னர் நடந்தவை விரும்பத் தகாதது. ஆகும். மறுமலர்ச்சி திமுகவின் 31 ஆண்டுகால வரலாற்றில் செய்தியாளர்களிடம் தொண்டர்கள் இவ்வாறு என்றும் நடந்து கொண்டது இல்லை. நடந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட முறையிலும் மதிமுகவின் சார்பிலும் பத்திரிக்கை ஊடக நண்பர்களிடம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.