Durai Vaiko MP met Finance Minister Nirmala Sitharaman and spoke
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அமைச்சக அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (01-12-25) சந்தித்துப் பேசினார்.
இது குறித்து துரை வைகோ கூறியதாவது, “திருச்சியில் உலர் துறைமுகம் (Dry Port) அமைப்பதற்கு ஒன்றிய அரசின் தேவையான ஒத்துழைப்பையும், முழு ஒப்புதலையும் வழங்க வேண்டுமாறு விரிவான கோரிக்கைக் கடிதம் ஒன்றை நேரில் அளித்து உரையாடினேன். கடந்த 21.08.2025 அன்று நிதி அமைச்சரை நேரில் சந்தித்து இதே கோரிக்கையை வைத்திருந்ததையும், அப்போது அமைச்சர் இத்திட்டத்திற்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்து, நிதியமைச்சகம் முக்கிய பங்களிப்பு செய்யும் என உறுதியளித்திருந்ததையும் நினைவூட்டினேன்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிச் சாலைகள் துறை அமைச்சர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர், வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோரையும் ஏற்கெனவே சந்தித்து இத்திட்டத்திற்கு ஆதரவு பெற்றிருப்பதையும், அவர்கள் அனைவரும் இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்திருப்பதை தெரிவித்தேன். தமிழ்நாடு அரசு, மாநில அளவில் தேவையான முழு ஆதரவை இத்திட்டத்திற்கு வழங்கத் தயாராக உள்ளதையும், ஆனால் ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் எடுத்துரைத்தேன்.
எனவே, நிதியமைச்சகத்தின் சார்பில், திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவு மற்றும் ஒப்புதல் கடிதத்தை விரைந்து வழங்கிட வேண்டுமாறு கேட்டுக்கொண்டேன். இக்கடிதம் பெறப்பட்ட பிறகே, மாநில அரசு திட்ட செயலாக்கத்தை தொடங்க முடியும் என்பதை வலியுறுத்தினேன். இத்திட்டம் நிறைவேறினால் திருச்சி மற்றும் தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி ஊக்குவிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றும் என்றும், திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் என்றும் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தேன். நிதியமைச்சர் எனது கோரிக்கைக் கடிதத்தை முழுமையாக வாசித்துவிட்டு, இத்திட்டம் குறித்த எனது விளக்கங்களையும் கேட்டறிந்தார். இக்கோரிக்கைக்கு உரிய முன்னுரிமை கொடுத்து, பரிசீலித்து, தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இந்தச் சந்திப்பு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக அமைந்தது” எனத் தெரிவித்தார்
Follow Us