நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு முதன்முறையாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வந்திருப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பியுமான துரை வைகோ பெருமிதமாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக துரை வைகோ கூறியதாவது, ‘நான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, கழகப் பொதுச் செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ முதன்முறையாக திருச்சி உழவர் சந்தையில் அமைந்துள்ள எனது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு இன்று காலை 10.15 மணியளவில் வருகை தந்தார். அலுவலகத்திற்குள் நுழைந்த பிறகு அங்கே வைக்கப்பட்டு இருக்கிற திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வரைபடம் உள்ளிட்ட திருச்சியின் பழமையையும், சிறப்புகளையும் உள்ளடக்கிய படங்களை பார்வையிட்டு மகிழ்ந்தார். எனது அலுவலக உதவியாளர்களின் அறையை வைகோ பார்வையிட்ட போது அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். 

அதன்பிறகு, எனது அறைக்கு வருகை தந்த வைகோவை எனது இருக்கையில் அமர வைத்து விட்டு, எனது வெற்றிக்காகப் பாடுபட்ட துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் மாவட்டச் செயலாளர்களை இருக்கையில் அமர வைத்துவிட்டு நான் தலைவரின் அருகில் நின்றவாரே நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக செயல்பாடுகளை அவரிடம் விளக்கினேன். எனது தொகுதிக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்கள் என் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பாக இருந்து வருவதை எடுத்துக்கூறி, ஆனபோதும் 20 விழுக்காடு தான் எனக்கு நிறைவு. இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது என தலைவரிடம் தெரிவித்தேன்.

அதைத் தொடர்ந்து, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும், அவரது இயக்க திருச்சி மாவட்டத் தோழர்களுடன் அலுவலகம் வருகை தந்து வைகோவிடம் உரையாடினார். வைகோவோடு எனது தாயாரும் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். வைகோவின் வருகை எனக்கும், கழகத் தோழர்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இறுதியாக நாடாளுன்ற உறுப்பினர் அலுவலக வரவேற்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த வருகை பதிவேட்டில் தனது கையொப்பத்தை பதிவு செய்துவிட்டு, ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்துவிட்டு விடைபெற்றுச் சென்றார். இந்நிகழ்வில், கழக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, புதுக்கோட்டை எஸ்.கே.கலியமூர்த்தி, திருச்சி தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி வடக்கு டி.டி.சி.சேரன், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கர சேதுபதி உள்ளிட்ட மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.