ரஷ்யாவில் போர்முனையில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு, என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வேன் என நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் முதன்மைச் செயலாளர் செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரஷ்யாவில் போர்முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக, நான் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இதற்காக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் ரஷ்யாவின் துணைத் தூதரைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து, இதுவரையிலான நிலவரத்தை எடுத்துரைத்துள்ளேன். 

Advertisment

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், எனது கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான கடிதம் ஒன்றை நேற்று 30.08.2025 அனுப்பியுள்ளது. அதில், மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம், கிஷோர் சரவணனை ரஷ்ய இராணுவத்திலிருந்து விடுவிக்க தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், இந்த விவகாரம் ரஷ்ய அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜூலை 15, 2025 அன்று சீனாவின் டியான்ஜினில் நடைபெற்ற SCO வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் இவ்விவகாரத்தை எழுப்பியதாகவும், ஆகஸ்ட் 5, 2025 அன்று ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் கர்னல் ஜெனரல் அலெக்ஸாண்டர் ஃபோமினுடனான சந்திப்பில் இப்பிரச்சினையை மீண்டும் எடுத்துரைத்ததாகவும். ஆகஸ்ட் 21, 2025 அன்று மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா இடையேயான 26வது அரசு-அரசு ஆணையக் கூட்டத்தில் (IRIGC-TEC) மீண்டும் இதுகுறித்து விவாதித்ததாகவும், அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்த விளக்கக் கடிதத்திற்கு பதிலாக, இன்று 31.08.2025 நான் நன்றி பாராட்டி அனுப்பிய கடிதத்தின் விவரம் பின்வருமாறு, ரஷ்யாவில் போர்முனையில் சிக்கித் தவிக்கும் கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டுமென்ற எனது கோரிக்கைக்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளுக்கு, மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிய அரசு, அமெரிக்காவின் 50% வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் இத்தருணத்தில், எனது, இந்த உயிர்காக்கும் விவகாரத்திற்கான கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை , இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய தாங்கள் காட்டும் அர்ப்பணிப்பு எங்களுக்கு மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

kishore-saravanan-russia

Advertisment

கிஷோர் சரவணனை மீட்க நான் மேற்கொண்ட முயற்சிகளை ஊடகங்கள் வாயிலாக அறிந்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏழை, எளிய கிராமப்புற மக்கள், தங்களது பிள்ளைகளும் ரஷ்யாவில் இதேபோல் சிக்கியுள்ளதாகவும், அவர்களையும் மீட்டு அழைத்து வர வேண்டுமென்று நேரிலும் தொலைபேசி வழியாகவும் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, கிஷோர் சரவணனுக்கு மட்டுமல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பு என்று ஏமாற்றப்பட்டு ரஷ்யாவில் போர்முனையில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு, என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.