இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு (வயது 100) வீட்டில் இருந்தபோது கடந்த 22ஆம் தேதி (22.08.2025) கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நல்லகண்ணு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/01/a5072-2025-09-01-15-54-11.jpg)
பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்திருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். இந்நிலையில் நக்கீரன் ஆசிரியர் மற்றும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் சிகிச்சை பெற்றுவரும் நல்லகண்ணுவை பார்வையாளர் இடத்தில் இருந்து பார்த்தனர். அப்போது நக்கீரன் ஆசிரியருக்கு நல்லகண்ணு ஐய்யா கையை உயர்த்தி காட்டினார். தொடர்ந்து நல்லகண்ணுவின் உறவினர்கள் மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சையின் நிலவரம் குறித்துக் கேட்டறிந்தனர். நாளையிலிருந்து வென்டிலேட்டர் நீக்கப்பட்டு இயற்கை சுவாச நிலைக்கு நல்லகண்ணு மாற்றப்பட இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.