அண்மையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு பயணத்தின் பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு வழக்கை சிபிஐ கையில் எடுத்திருக்கிறது.
கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி இணைய பரிவர்த்தனையான RTGS வழியாக மூலம் பாதிக்கப்ட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. அதேபோல் காயமடைந்த 100க்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகளில் தலா இரண்டு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் 'ஆர்டிஜிஎஸ் வழியாக பணம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த கட்சியை நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. இதை எப்படி பார்க்கிறீர்கள்?' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த துரைமுருகன் ''அது அவர்களுடைய மெத்தட். இதையெல்லாம் நீங்கள் அவரிடம் கேட்க வேண்டும். விஜய் போகாததற்கு நான் என்ன பண்ணுவேன். அவர்களுடைய கட்சிக்கு எது நல்லா இருக்கும், எது வின்னிங் சான்ஸ் கொடுக்கிறது என்பதை அவர்கள் டிசைட் பண்ண வேண்டும்.
41 பேர் இறந்து விட்டார்கள் எல்லாரும் அவர் மேல் தான் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். அவர்தான் அதற்கு பதில் கொடுக்க வேண்டும். அவரோ வெளிய வராமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அது எந்த அளவிற்கு அவருக்கு பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால் ஊரில் சொல்வார்கள் லேட்டானா ஆறின கஞ்சி என்று . அது மாதிரி போய்விடும். அதற்குள் அவர்களே மறந்து விடுவார்கள். இப்படி பல பிரச்சனைகள் இருக்கிறது. அதை எல்லாம் எண்ணிப் பார்க்கக் கூடிய அரசியல் சாதுர்யம் விஜய்க்கு இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. ஒரு கட்சியை நடத்துவது என்பது சாதாரணமானது அல்ல.
கட்சி நடத்துகின்ற தலைவருக்கு முகத்தில் இரண்டு கண்ணல்ல உடம்பு முழுக்க கண்ணாக இருக்க வேண்டும். மூளை மட்டும் அல்லாது உடல் முழுவதும் சிந்திக்கும் திறன் இருக்க வேண்டும். காரணம் பல்வேறு குணங்களைக் கொண்ட, பல்வேறு தொழில் செய்கின்ற, பல்வேறு விதமான மனிதர்களை அடங்கியது ஒரு கட்சி. எல்லாரையும் ஒன்று சேர்த்து அணைத்து கொண்டு போகின்ற திறமை எந்த கட்சிக்கு இருக்கிறதோ அந்த கட்சி வெற்றிபெறும், செழிப்பாக இருக்கும். அது இல்லாத கட்சி கொஞ்ச காலம் தான் இருக்கும்''என்றார்.
தொடர்ந்து விஜய் சுற்றுப்பயணத்தை அறிவித்திருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ''சுற்றுப்பயணம் பற்றியெல்லாம் விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும். அவருக்கு நிறைய சொல்லி இருப்பார்கள். அதன்படி முடிவெடுத்திருக்கிறார்'' என்றார்.