மயிலாடுதுறையில் மாவட்ட மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றி வரும் சுந்தரேசன் தன்னுடைய வீட்டில் இருந்து மதுவிலக்கு அலுவலகத்திற்கு ஒரு கிலோ மீட்டர் வரை நடந்தே சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இதன் பின்னணியில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்தாண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். சுமார் ஒரு வருடமாக மதுவிலக்குத்துறை டிஎஸ்பியாக பணியாற்றி வரும் நிலையில், மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக விற்கப்படும் மது மற்றும் போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றில் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த 23க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களுக்கு டிஎஸ்பி சுந்தரேசன் சீல் வைத்துள்ளார். மதுபான கடத்தல் தொடர்பாக 1500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு 700க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். இதில் ஐந்து பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர் டிஎஸ்பி சுந்தரேசன் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் அவருக்காக வழங்கப்பட்டிருந்த வாகனத்தை மாவட்ட காவல்துறை தலைமை எந்தவித காரணமும் தெரிவிக்காமல் திரும்பப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மயிலாடுதுறைக்கு தமிழக முதல்வர் வருவதற்கு முன்பாக அங்கு வந்த அமைச்சர்களுக்கு பாதுகாப்பிற்காக செல்ல சுந்தரேசனின் வாகனத்தை மாவட்ட காவல்துறை தலைமை கேட்டதாகவும், ஆனால் சுந்தரேசன் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பாதுகாப்புப் பணிக்காக வெளியூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுந்தரேசன் மீண்டும் வந்து பார்த்த பொழுது வாகனம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் டிஎஸ்பி சுந்தரேசன் சில நாட்களாகவே இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று வந்தார். இந்நிலையில் தன்னுடைய வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை டிஎஸ்பி சுந்தரேசன் நடந்தே செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வரலாகி வருகிறது.
அதேநேரம் மாவட்ட காவல்துறையோ டிஎஸ்பியின் வாகனம் பழுது காரணமாக சரி செய்ய எடுத்து செல்லப்பட்டுள்ளது. மாற்று வாகனம் வழங்கப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணையத்தில் டிஎஸ்பியாகப் பணியாற்றிய சுந்தரேசன், காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கு மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நிகழ்ந்த என்கவுண்டர் தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர். காவல்துறையில் இருந்த தவறுகளை சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.