DSP Sundaresan suspended for accusing higher officials!
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி.யாக பதவி வகித்து வருபவர் சுந்தரேசன். இவர் தனது அரசு வாகனம் காவல் துறையால் எந்தவித காரணமும் தெரிவிக்காமல் திரும்பப் பெற்றதாகக் கூறி கடந்த 17ஆம் தேதி காலை தனது வீட்டிலிருந்து அலுவலகம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது. அதே சமயம் இந்த விவகாரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. இதனையடுத்து மாவட்ட காவல்துறையோ டி.எஸ்.பி.யின் வாகனம் பழுது காரணமாகச் சரி செய்ய எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, மாற்று வாகனம் வழங்கப்பட்டுள்ளது என விளக்கமளித்திருந்தது.
இதனையடுத்து டி.எஸ்.பி. சுந்தரேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கிற அனைத்து காவலர்கள், அதிகாரிகள் எல்லாருக்கும் தெரியும். இங்கே என்ன கொடுமை நடந்துகிட்டு இருக்கிறது என்று. இதற்குக் காரணம் ஒருவர் எஸ்.பி. ஸ்டாலின், இன்னொருவர் ஆய்வாளர் ஸ்பெஷல் பிரான்ச் பாலசந்தர். எஸ்.பி.யை கூட ஒரு அதிகாரியாக எடுத்துக்கொள்ளலாம். இந்த பாலசந்தர் என்னை மட்டும் இல்லை பல அதிகாரிகளைத் துன்புறுத்துகிறார். வேலை செய்யவிடாமல் செய்கிறார். இந்த மாதிரி பிரச்சனை செய்கிறார்” எனப் பேசியிருந்தார். இவரது பேச்சு, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாகத் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் மயிலாடுதுறையில் முகாமிட்டு நேற்று (18.07.2025) காலை முதல் அனைத்து தரப்பு காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கத்துறை டி.எஸ்.பி. சுந்தரேசனைத் தற்காலிக பணிநீக்கம் செய்வதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி ஊடகங்களில் பேட்டி அளித்து பொது ஊழியருக்கான விதிகளை மீறி ஒழுங்கீனத்தில் ஈடுபட்டதால் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, டி.எஸ்.பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.