சிதம்பரத்தில் ஹெல்மெட் அணிந்து வருவதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தொடங்கி வைத்தார்.
சிதம்பரம் கஞ்சித்தொட்டி பேருந்து நிறுத்தம் சாலையில் சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தில்லை கோவிந்தராஜ பெருமாள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து ஓட்ட வேண்டும் , சாலை விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடித்து விபத்துகளை தடுக்க பாதுகாப்பான முறையில் சாலையில் பொதுமக்கள் செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் கொடுத்தும் சாலை பாதுகாப்பு குறித்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதைத் தொடர்ந்து இருபதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.
இச்செயலை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து, போக்குவரத்து காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது போக்குவரத்து காவலர்கள் தேவநாதன், பிரபு, சந்தான லட்சுமி உள்பட காவலர்கள் உடன் இருந்தனர்.