நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்று (28-07-25) நடைபெற்றது. இந்த விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் உள்ளிடோர் பேசினர். மேலும், ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே சமயம், மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாவத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் இன்று (29-07-25) பேசினார். அவரது உரையில், ''போருக்கு செல்லும் போது முழுமையாக செயல்பட்டு முழுமையாக வீழ்த்த வேண்டும். முழுவதுமாக பாகிஸ்தானை போரில் தோற்கடிக்க வேண்டும். இந்திய ராணுவத்தின் கைகளை பின்புறம் கட்டாதீர்கள். பிரதமர் என்ற பிம்பத்தை காக்க மட்டுமே ராணுவத்தை மோடி பயன்படுத்துகிறார். தன்னுடைய இமேஜை காக்கவே பிரதமர் முன் நிற்கிறார். இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு பல உதவிகளை செய்தது சீனா தான். போர் தொடர்பான பல முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா அளித்துள்ளது.
சீனாவும் பாகிஸ்தானும் ஒரே ராணுவம் போல செயல்படுகின்றன. நான் சவால் விடுகிறேன் முன்னாள் பிரதமர் இந்திராவை போல மோடிக்கு துணிவு இருந்தால் இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு காரணம் டிரம்ப் இல்லை என பிரதமர் மோடி கூறுவாரா? இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தடுத்தது நான் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுவரை 29 முறை கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் ராணுவ அதிகாரியுடன் டிரம்ப் விருந்து சாப்பிட்டுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதுபோன்ற தாக்குதல் நேரங்களில் பாகிஸ்தானை மற்ற நாடுகள் கண்டித்தன. பகல்ஹாம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானை ஒரு நாடு கூட கண்டிக்கவில்லை.
செயற்கைக்கோள் தகவல்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் பாகிஸ்தானுக்கு சீனா செய்து கொடுத்துள்ளது. பாகிஸ்தான், சீனா விமான இயக்கங்களை ஒருங்கிணைக்க ஒரு மையமே உள்ளது. பாகிஸ்தான் சீனா இடையே உள்ள இந்த கூட்டணி இந்தியாவிற்கும் மிகவும் ஆபத்தானது. அப்படி இருக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு முறை கூட சீனா என்ற பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. சீனா-பாகிஸ்தான் இடையே உள்ள உறவை இந்திய வெளியுறவுத்துறை உடைக்க முயலவில்லை. இப்படி ஒவ்வொரு முறை பயங்கரவாத தாக்குதல் நடத்தும் போதும் பாகிஸ்தானை தாக்குவோமா? என வாதத்தை முன் வைத்தார்.