Drug trafficking is rampant under DMK rule! -EPS Kattam Photograph: (admk)
தமிழகத்தை மீட்போம் எனும் பிரச்சார பயணத்தில் திருச்சங்கோட்டில் பேசிய இ.பி.எஸ். "நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க பொதுக்கூட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. குறைவான நேரத்தில் தங்கமணி அவர்கள் பல்வேறு பிரச்சனைக்கு இடையில் பிரமாதமாக அரங்கம் பிடித்து, மின் விளக்குகள் அமைத்து பிரமாண்டம் காட்டியிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் நடக்கும் முதல் கூட்டமே வெற்றிகரமாக அமைந்துவிட்டது.
திமுக 53 மாத ஆட்சியில் திருச்செங்கோடு தொகுதியில் ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள். 2011-21 வரை அதிமுக 10 ஆண்டுகள் பொற்கால ஆட்சி என்று பாராட்டும் அளவுக்கு ஆட்சி செய்தோம். ஒரு சிலவற்றை இந்த நேரத்தில் சொன்னால் பொருத்தமாக இருக்கும். அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என்று ஸ்டாலின் கூறி வருகிறார். எனவே, திருச்செங்கோடு தொகுதியில் மட்டும் எவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தி இருக்கிறோம் என்பதை தெரிவிக்கிறேன்.
மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாருமில்லை. இன்று கூட செய்திகளில் பார்த்தேன். இனிமேல் ஆஸ்பத்திரியில் பயனாளிகள் என்று சொல்ல வேண்டுமாம், நோயாளி என்று சொல்லக்கூடாது. பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாம்? ஸ்டாலின் அவர்களே, இரண்டு பெயரை மட்டும் தயவுசெய்து மாற்றி விடாதீர்கள், அப்பா அம்மா பெயரை மாற்றிவிடாதீர்கள். இப்பகுதியில் திமுக கவுன்சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி, போலி மதுபானம் காய்ச்சி, அதை அவரது அரசே கண்டுபிடித்தது. திமுக ஆட்சியில்தான் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம். அதற்கு திமுக நிர்வாகிகள் துணை போகிறார்கள். கஞ்சா விற்பவர்களும் திமுக நிர்வாகிகள், அதனால் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை, அதிமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை முழுமையாக தடை செய்யப்படும்" என்றார் எடப்பாடி பழனிசாமி.