சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகை சார்பாக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்திற்கான அழைப்பு கொடுக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடமும் அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் ஆளுநர் மாளிகை அழைப்பை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருந்தன.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை சார்பில் வெளியாகியுள்ள சுதந்திர தின விழா செய்திக்குறிப்பில், தமிழக அரசு மீது காட்டமான சாடல்களை வைத்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அதில், 'சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆன பிறகும் பாகுபாடு உள்ளது நாம் அவமானப் படக்கூடியது. தமிழ் மொழி, கலாச்சாரம் என்பது நமது தேசத்தின் பெருமைகள். ஆனால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக நான்கு சவால்கள் உள்ளன.
அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப் பொருள் விநியோகம் நடக்கிறது. பொதுப்பாதையைப் பயன்படுத்தும் பட்டியலின மக்கள் உடல் ரீதியாக தாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. வேலைவாய்ப்பின்றி வெறும் படிப்பு சான்றிதழ் பெற்றவர்களாகவே மாணவர்கள் வெளியேறுகிறார்கள். தமிழ்நாட்டில் ரயில்கள், சாலை வசதிகள் என மத்திய அரசு பல நலத்திட்டங்கள் செய்து வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆளுநரின் அழைப்பைப் புறக்கணித்துள்ளார்.