போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எஸ். தர்மிஸ் அமர்வில் நேற்று (03.07.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், 'காவல்துறை விசாரணைக்காக அழைத்த பொழுது ஆஜராகி கிருஷ்ணா முழு ஒத்துழைப்பு வழங்கினார். மருத்துவப் பரிசோதனையில் அவர் போதைப்பொருளைப் பயன்படுத்தவில்லை என்ற முடிவுக்கு வந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர். இது அடிப்படை உரிமையை மீறிய செயல். எதன் அடிப்படையில் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார் என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை' என வாதிடப்பட்டது.
அதேபோல் ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'போதைப்பொருளைப் பதுக்கி வைப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது' என்ற வாதம் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் ஜரான வழக்கறிஞர் சரவணன், “ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்கள் இருவரும் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளது. எனவே மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, இருவருடைய ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த மேலும் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகிய இருவரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அரும்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் இவர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதேபோல் இருவரும் நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் விற்ற கெவினின் கூட்டாளி என்றும் தெரிய வந்துள்ளது.