Advertisment

“ஓசில தான வர்ற....’ பெண்ணிடம் அவதூறாகப் பேசிய அரசு பேருந்து ஓட்டுநர்!

Untitled-1

‘மகளிர் விடியல் பயணம்’ என்ற பெயரில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் குறிப்பிட்ட பேருந்துகளைத் தமிழக அரசு இயக்கி வருகிறது. இந்தப் பேருந்தில் பயணிக்கும் பெண்களைச் சில ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், “ஓசியில் தானே பயணம் செய்கிறீர்கள்” என்று கேட்ட சம்பவங்களும் பல அரங்கேறியிருக்கின்றன. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய பிறகு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்தது. அதே சமயம் பேருந்துகளில் ஏறும் ஆண்கள் சிலரும் பெண்களைப் பார்த்து “ஓசி டிக்கெட்” என்று கூறுவதும் ஆங்காங்கே நடந்த வண்ணமே இருக்கிறது. அவ்வபோது, ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கூட மகளிர் விடியல் பயணம் குறித்து அவதூறாக பேசி இருக்கின்றனர்.

Advertisment

இந்த நிலையில் நெல்லையில் மகளிர் இலவசப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணை ஓட்டுநர் ஒருவர் ஆபாசமாகவும் அறுவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருநெல்வேலி கட்டபொம்மன் பணிமனையைச் சேர்ந்த தடம் எண் 2 அரசுப் பேருந்து அரசு சிறப்பு மருத்துவமனையில் இருந்து புதிய பேருந்து நிலையம் வழியாக ரயில்வே நிலையம் சந்திப்பிற்கு இயக்கப்படுகிறது. அந்த வகையில் 23 ஆம் தேதி இரவு இயக்கப்பட்ட இந்தப் பேருந்தில் வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பெண் ஒருவர் ஏறியிருக்கிறார். 

Advertisment

இந்த நிலையில் அந்தப் பெண் மணி இறங்கும் இடத்தில் பேருந்தை நிறுத்தாமல் அதனைத் தாண்டிச் சென்று ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண்மணி ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் சரியாகப் பதிலளிக்காமல், ஆபாசமாகவும் அறுவருக்கத்தக்க வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், “ஓசி டிக்கெட்” என்று ஓட்டுநர் பெண்மணியை அவதூறாகவும் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்மணி தனது கணவருக்கு போன் செய்து பேருந்து நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் அங்கு வந்த பெண்ணின் கணவர் நியாயம் கேட்டபோது, “நான் தெரியாமல் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்” என்று ஓட்டுநர் கூறியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பெண்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் ஓட்டுநருக்கு எதிராகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.  இதனைத் தொடர்ந்து தற்போது பெண்ணிடம் அவதூறாகப் பேசிய ஓட்டுநர் முருகேசனை நெல்லை மண்டல போக்குவரத்து மேலாளர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் தமிழக அரசுப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான பெண்கள் தினசரி பணி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயனடைந்து வருகின்றனர். ஆனால், இதனை அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களே அவதூறாகப் பேசிப் பெண்களை அவமானப்படுத்துகின்றனர். இலவசப் பேருந்து பயணத் திட்டம் பெண்களுக்கு உரிமையும் மரியாதையும் அளிக்க வேண்டுமே தவிர, அவமானத்திற்கு இடமளிக்கக் கூடாது. ஆகையால், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு, தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

govt bus police nellai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe