செங்கல்பட்டில் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே ஒரு தனியார் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா இருவரும் இணைந்து இந்தக் காப்பகத்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் இந்தக் காப்பகத்தில் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு கல்வி, உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வண்டலூரில் உள்ள காப்பகத்திற்கு மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் ஆய்வுக்காகச் சென்றுள்ளனர். அப்போது, சிறுமிகள் பல்வேறு புகார்களை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக, காப்பக உரிமையாளர் அருள்தாஸின் ஓட்டுநர் பழனி என்பவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தை நல அலுவலர்கள், காப்பகத்தில் உள்ள மற்ற சிறுமிகளிடம் விசாரித்தபோது, ஓட்டுநர் பழனி 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட குழந்தை நல அலுவலர், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் பிரியா, மற்றும் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பழனி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இதற்கிடையே, காப்பக உரிமையாளர் அருள்தாஸை காவல்துறையினர் கைது செய்த பிறகு, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரியா மற்றும் ஓட்டுநர் பழனி ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், வண்டலூரில் மீண்டும் பல சிறுமிகள் காப்பகத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட இந்தச் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அண்மைக் காலமாக, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பீகாரில் உள்ள ஒரு குழந்தைகள் விடுதியில் 2018-ஆம் ஆண்டு 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அதில் சிலருக்கு கரு உருவாகியது. இதை அறிந்த விடுதி நிர்வாகமே கருக்கலைப்பு செய்தது. அதிலும் குறிப்பாக, ஒரு சிறுமி கொல்லப்பட்டு, காப்பக வளாகத்திலேயே புதைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், 18 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு இந்தியாவில் குழந்தை நல காப்பகங்களில் முறையான மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் தேவையை வெளிப்படுத்தியது.
மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மாதந்தோறும் குழந்தைகள் நல காப்பகங்களுக்கு சென்று ஆய்வு செய்து, காப்பகத்தில் உள்ள குழந்தைகளிடம் நிறைகளையும் குறைகளையும் கேட்டறிந்து, அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். இத்தகைய முறையான ஆய்வுகள் மற்றும் தீர்வு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியும் என்று குழந்தை நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.